ஹிந்தி படிக்கக் கூடாதா? திமுகவுக்கு என்ன அருகதை இருக்கு? எச். ராஜா ஆவேசம்!

பாஜகவை பொருத்தவரை கூட்டணியை பற்றிய அறிவிப்பை வெளியிட மாட்டோம் என மாநில பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Nov 21, 2024 - 06:51
Nov 21, 2024 - 21:12
 0
ஹிந்தி படிக்கக் கூடாதா? திமுகவுக்கு என்ன அருகதை இருக்கு?  எச். ராஜா ஆவேசம்!
ஹிந்தி படிக்கக் கூடாதா? திமுகவுக்கு என்ன அருகதை இருக்கு? எச். ராஜா ஆவேசம்!

சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “68 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது வரவேற்கத்தக்கது.  டாஸ்மாக் சாராயம், சந்து கடை சாராயம் என அன்பு நண்பர் துரைமுருகன் ஒப்புக்கொண்டிருக்கிறார். டாஸ்மாக் சரக்கில் போதை ஏறவில்லை என்பதற்காக சந்து கடை சரக்கை தேடி தமிழ் குடிமக்கள் போகிறார்கள்  என கூறினார். இந்த அரசாங்கத்தின் முழு தோல்விதான் கள்ளக்குறிச்சி சம்பவம்.

எல்.ஐ.சி விஷயத்தில் எல்லா மொழிகளிலும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.  சில காரணங்களால் தமிழ் வரவில்லை. ஆனால் அதை முதலமைச்சர் பெரிய பிரச்சனையாக எடுத்துப் பேசினார். தமிழ்நாட்டில் திமுக தமிழுக்காக பேசுவதற்கு எந்த அருகதையாவது இருக்கிறதா? ஏனென்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் தமிழ் படிக்கவில்லை என செய்திகள் வருகின்றன. தன் வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டீர்கள் ஆனால் தமிழக மக்களுக்கு இருமொழி கொள்கை பேசுவீர்களா? ஸ்டாலின் குழந்தைகள், கனிமொழி குழந்தைகள், இருமொழி கொள்கை படிக்கிறார்களா? அதை பின்பற்றுகிறார்களா? வெட்கமே இல்லாமல் சிபிஎஸ்சி பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்.

திமுகவில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை சமச்சீர் கல்வி முறையில் சேர்க்க மாட்டார்களா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பத்து ஆண்டுகளாக மூன்றாவது மொழியாக ஹிந்தி இருந்தது. முதன்முதலாக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகுதான் கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் தாய்மொழி, ஆங்கிலம், மற்ற பிற மொழிகள் எனக் கொண்டுவரப்பட்டது. திமுகவினரின் வாரிசுகள் சென்னையில் உள்ள சமச்சீர் கல்வியில் படிக்கிறார்களா? அல்லது சிபிஎஸ்சி-யில் படிக்கிறார்களா? எனத் தகவல் எடுக்கச் சொல்லி இருக்கிறேன். 40 திமுக தலைவர்கள் நடத்தக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் பற்றி பட்டியல் வெளியிட்டு இருக்கிறேன். திமுகவினர் இரட்டை வேடம் போடுகிறார்கள். தன் வீட்டுக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் ஹிந்தி படிக்கக் கூடாதா?

தூத்துக்குடி மாவட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கனிமொழி அதைப் பற்றி பேசவில்லை இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாயை மூடிக்கொண்டு உள்ளார். மகாவிஷ்ணு ஆன்மீகம் பற்றி பேசிவிட்டார் என எவ்வளவு நாடகம் போட்டார் வெட்கமே இல்லாமல். திமுகவினர் எல்லா விதத்திலும் தோற்றுப் போனவர்கள். மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறார்கள். பெண்களை பற்றி கவலைப்படாத அரசாங்கம் இது. பாஜகவை பொருத்தவரை கூட்டணியை பற்றிய அறிவிப்பை வெளியிட மாட்டோம். கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை செயல்படுத்த வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்” எனக் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow