தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Nov 21, 2024 - 07:19
Nov 22, 2024 - 00:52
 0
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இளம் வழக்கறிஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் ஏரிக்கரையை சேர்ந்தவர் வழக்கறிஞர் கண்ணன். இவர் ஓசூர் நீதிமன்றத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கண்ணனை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கண்ணன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் கண்ணனை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கண்ணனை வெட்டித் தப்பியோடிய நபர் ஆனந்த குமார் என்பதும், அவர் அருகில் உள்ள JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 

அதில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வர் ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குரியாக்கியுள்ள திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow