கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Oct 15, 2024 - 17:58
Oct 15, 2024 - 18:39
 0
கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் என தெரிவித்துள்ளது.

அதற்கடுத்த 2 நாட்களில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசுவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளிலும், சாலைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மின்சாரம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாநகரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது.

மக்கள் மிக அடர்த்தியாக உள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் அடிப்படைக் கட்டுமானம் முறையாகச் செய்யப்படாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்ற கொடுந்துயரை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் நிகழ்கிறது என்றால், தற்போது தமிழ்நாட்டின் பிற நகரங்களும் அதேபோன்று மழை வெள்ளத்தில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருப்பது திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியாகும்.

இயற்கைச் சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனைச் செய்யத் தவறி, தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.

தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கென ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழைவெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது என்பது திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் நிகழ்கின்ற ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும்.

2015ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காது இருந்துவிட்டு திமுக அரசும் தொடர்ச்சியாக மக்களை வெள்ளப் பாதிப்பிற்குச் சிக்கித்தவிக்க விட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் முதன்மை காரணம்.

சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லையென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல நூறுகோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? அல்லது அக்கறை இல்லையா?

இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், மழைவெள்ள பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசுக்கும், அதிகாரிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நாம் தமிழர் உறவுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். அவர்களும் களத்தில் செயலாற்றி, உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அரசு முழு வீச்சில் செயல்பட்டால் மட்டும்தான் மழைவெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டுக் கொண்டு வர முடியுமென்பதை உணர்ந்து, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தலைநகர் சென்னைக்குத் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களைப் போலல்லாது தமிழ்நாடு அரசு பன்மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மக்களையும், அவர்தம் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow