சென்னையில் நேற்று இரவு முதல் நகரின் பல பகுதிகளில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மா. சுப்பிரமணியன், வருவாய்-பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய்-பேரிடர் மேலாண்மை செயலாளர் அமுதா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்பதால், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், சென்னையில் 24 மணி நேரத்தில் 46.48 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.1 சென்டி மீட்டர் மழையும் தேனாம்பேட்டையில் 6.1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 8 மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல், 1000 நபர்கள் தங்கும் வகையில் 300 எண்ணிக்கையிலான நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 35 சமையல் அறை மையங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் கூறினார். மேலும், சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில், 20-ல் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை எனவும், கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதைகள் மழைநீர் தேக்கம் காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேநேரம் அங்கு தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, 300க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் எங்கேயும் மின்தடை இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். அதேபோல், சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு கடந்த 12 மணி நேரத்தில் 1500 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார். முக்கியமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என தெரிவித்தார். அவர் கூறிய சில நிமிடங்களிலேயே சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சென்னையில் நிவாரண பணிக்காக 89 படகுகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக துணை முதலமைச்சர் உதயநிதி கூறினார். அதேபோல், 931 மையங்கள் நிவாரண பணிக்காக தயார் நிலையில் உள்ளதாகவும், சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மழை, வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க நோடல் ஆபீஸர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் மழை வெள்ள பாதிப்பை உணர்ந்து 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் உள்ள நிலையில், தேவைப்படும் போது அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றார். .
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்பதால், முன்கூட்டியே தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை முகாம்களில் தங்க வைக்கக்கூடிய அளவுக்கு மழை பாதிப்பு இன்னும் ஏற்படவில்லை எனவும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் சேவைகளில் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.