Breaking news

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; த.வெ.க.வில் இணைய திட்டம்?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; த.வெ.க.வில் இணைய திட்டம்?
Sengottaiyan
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவம்பர் 26) சபாநாயகர் மு. அப்பாவுவைச் சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜினாமா மற்றும் அதிமுகவில் இருந்து நீக்கம்

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவில் எம்எல்ஏ, அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவர் கே.ஏ. செங்கோட்டையன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முக்கியத் துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். சமீப காலமாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணங்கள் உட்பட அவரது நிகழ்ச்சிகளைச் செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார்.

இந்த நிலையில், தேவர் ஜெயந்தி அன்று சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரைச் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதைத் தொடர்ந்து, கடும் மன உளைச்சலில் இருந்த செங்கோட்டையன், இன்று கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைச் சபாநாயகர் மு. அப்பாவுவிடம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த செங்கோட்டையன், தனது தங்கை கணவர் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், நாளை (நவம்பர் 27) சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் விஜய்யைச் சந்தித்துச் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.