Breaking news

விஜய் உடன் செங்கோட்டையன் சந்திப்பு: அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன். தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

விஜய் உடன் செங்கோட்டையன் சந்திப்பு: அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு!
Sengottaiyan meets Vijay
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுகவின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவம்பர் 26) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில் செங்கோட்டையனுக்குத் த.வெ.க.வில் அமைப்புப் பொதுச்செயலாளர் பதவி வழங்குவது குறித்துப் பேசப்பட்டதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜினாமா பின்னணியும் த.வெ.க. பேச்சுவார்த்தையும்

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தினார். மேலும், தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்ததால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனையும் அவரது ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இதைத் தொடர்ந்து, த.வெ.க.வில் இணைவது தொடர்பாகச் செங்கோட்டையன் தரப்பு மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு, ஆதரவாளர்களுக்குப் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளைச் செங்கோட்டையன் தரப்பு முன்வைத்தது. இந்தக் கோரிக்கைகள் அனைத்துக்கும் விஜய் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக, செங்கோட்டையன் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

விஜய் உடனான சந்திப்பு மற்றும் பதவி ஒதுக்கீடு

இந்த நிலையில், நாளை (நவம்பர் 27) த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், அவருக்கு என்ன பதவி வழங்குவது என்பது குறித்துப் பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் மாலை ஆலோசனை மேற்கொண்டார். சிறிது நேரத்தில், ஆதவ் அர்ஜூனாவின் காரில் செங்கோட்டையன் ஆலோசனை நடைபெறும் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அங்கு த.வெ.க. தலைவர் விஜய்யைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செங்கோட்டையனுக்குத் த.வெ.க.வில் அமைப்புப் பொதுச்செயலாளர் பதவி வழங்குவது தொடர்பாகக் கூறப்பட்டதாகவும், அதற்குச் செங்கோட்டையன் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் த.வெ.க. தரப்பில் கூறப்பட்டுகிறது.