Breaking news

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!
Thiruparankundram Case
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பே விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டதுடன், 144 தடை உத்தரவையும் ரத்து செய்தார்.

அவமதிப்பு வழக்கில் நீதிபதியின் அதிரடிக் கருத்துகள்

அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று மீண்டும் விசாரித்தார். அப்போது நீதிபதி, "தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை; ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது," என்று கருத்து தெரிவித்தார்.

காவல் ஆணையரிடம் கேள்வி மற்றும் விளக்கம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்தபோது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உடனே காணொலியில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். "சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; உடனே ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிடவே, காணொலி வாயிலாக மதுரை காவல் ஆணையர் ஆஜரானார்.

அப்போது, "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்று நீதிபதி கேட்டார். அதற்கு, "3.30 மணி முதல் பேரிகாடுகளைப் போட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தோம்" என்று அவர் பதிலளித்தார். "144 தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு எப்போது பரிந்துரை செய்தீர்கள்?" என்ற நீதிபதியின் கேள்விக்கு, "மாலை 5.45 மணியளவில் பரிந்துரைக்கப்பட்டது" என்று காவல் ஆணையர் கூறினார். மேலும், "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கூடாது, நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல" என்றும் காவல் ஆணையர் விளக்கமளித்தார்.

தீர்ப்பும் முக்கிய உத்தரவும்

இந்த வழக்கு விசாரணை முடிவில் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். தீபமேற்றக் காவல் ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். மேலும், திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் ரத்து செய்து அவர் உத்தரவு பிறப்பித்தார்.