Breaking news

எம்ஜிஆர் மாளிகை to பனையூர்.. தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

எம்ஜிஆர் மாளிகை to பனையூர்.. தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
Sengottaiyan joins TVK
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவம்பர் 27) காலை விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த செங்கோட்டையனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைய முடிவு செய்தார். அதற்கு முன்னோட்டமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்த அவர், தனது கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக கொடி கட்டிய கார், கையில் பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி, சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் ஆகியவற்றுடன் அவர் பதவியைத் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் உடன் இரு கட்ட ஆலோசனை

செங்கோட்டையன், நேற்று மாலை 4.30 மணி அளவில் சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இரு கட்டங்களாக நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக விஜய், செங்கோட்டையன், ஜான் ஆரோக்கியசாமி, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

இரண்டாம் கட்டமாக விஜய், செங்கோட்டையனுடன், த.வெ.க. வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மூவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

செங்கோட்டையனுக்குப் புதிய பொறுப்புகள்

இந்த ஆலோசனையில், அரை நூற்றாண்டு காலம் அதிமுகவில் இருந்த செங்கோட்டையனுக்குத் த.வெ.க.வில் முக்கியப் பொறுப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குத் த.வெ.க. நிர்வாகக் குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன், கொங்கு மண்டலப் பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட இருக்கிறது.

கொங்கு மண்டலத்தின் வெற்றியைச் செங்கோட்டையன் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கான பணிகளை ஜான் ஆரோக்கியசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக, கட்சி சார்ந்த விஷயங்கள் தொடர்பாக இரண்டாம் கட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளாமல், நேரடியாக விஜயிடம் செங்கோட்டையன் ரிப்போர்ட் செய்யலாம் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

த.வெ.க.வில் இணைப்பு

முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று காலை 10:00 மணி அளவில் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். த.வெ.க.வில் இணைந்த அவருக்குக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு என்னென்ன பதவிகள் வழங்கப்பட உள்ளன என்பது குறித்து முக்கியத் தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில், விரைவில் த.வெ.க. தலைவர் விஜய் மக்களைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.