இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நபிக்கு உதவிய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ!
Delhi car blast
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்திய முக்கியக் குற்றவாளியான உமர் முகமது நபிக்கு அடைக்கலம் அளித்து உதவிய ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

குண்டுவெடிப்புச் சம்பவம் மற்றும் விசாரணை

டெல்லி செங்கோட்டை அருகேயுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகினர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா காவல் துறையின் உதவியுடன் தேசியப் புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

உமர் நபிக்கு உதவிய நபர் கைது

முன்னதாக, புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னெவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரியானா மாநிலம், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சோயப் என்ற நபரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சோயப், குண்டுவெடிப்பைச் செய்த உமர் முகமது நபி தங்குவதற்கு அடைக்கலம் அளித்து, அவர் பொருள்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ஐஏ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சோயப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.