Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரதம்.. மகாலட்சுமியின் அருளோடு குபேரன் அருள் கிடைக்க எப்படி வணங்கலாம்?

Lord Kuberan Worship in Varalakshmi Viratham 2024 : செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.

Aug 14, 2024 - 12:34
Aug 15, 2024 - 09:59
 0
Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரதம்.. மகாலட்சுமியின் அருளோடு குபேரன் அருள் கிடைக்க எப்படி வணங்கலாம்?
Lord Kuberan Worship in Varalakshmi Viratham 2024

Lord Kuberan Worship in Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி பூஜை கொண்டாடப்படும் இந்த நாளில் மகாலட்சுமியை எப்படி எந்த மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கலாம் என்று பார்க்கலாம். அன்னை மகாலட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்ம ராஜனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள். 

மகாலட்சுமியின் அவதாரங்கள்:

லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூத்த தேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர். ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம். லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

வில்வ மரம்:  

வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. 

துளசி செடி: 

பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது. 

துளசி தரிசனம்: 

மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். 

தாமரை மலர்கள்: 

மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.  ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.  

பசுவில் வாசம் செய்யும் லட்சுமி: 

இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள். கோமாதாவை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. தேவேந்திரன் மகாலட்சுமியை வணங்கி  அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார். வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் இந்த நாளில் நாமும் விரதம் இருந்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் குபேர யோகத்தையும் பெறுவோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow