மத்திய பட்ஜெட்.. மாற்றாந்தாய் மனப்பான்மை.. பாஜக அரசுக்கு எதிராக களமிறங்கும் திமுக

DMK Protest Against Central Government : பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து ஜூலை 27ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

Jul 25, 2024 - 14:34
Jul 26, 2024 - 10:01
 0
மத்திய பட்ஜெட்.. மாற்றாந்தாய் மனப்பான்மை.. பாஜக அரசுக்கு எதிராக களமிறங்கும் திமுக
DMK Protest Against Central Government

DMK Protest Against Central Government : நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை(Union Budget 2024) அமைந்திருப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசைக் கண்டித்து வரும் ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச் சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை.

மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர், முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஸ்டாலினுடன் கைகோர்த்த 3 மாநில முதல்வர்கள்

மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். மாவட்டக் கழக நிர்வாகிகள் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள்,

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow