நீட் எதிர்ப்பு நாடகம்..திமுக உருவாக்கிய போலி பிம்பம்.. அண்ணாமலை சாடல்

திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு வந்த பிறகே அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Jul 3, 2024 - 11:45
Jul 3, 2024 - 12:07
 0
நீட் எதிர்ப்பு நாடகம்..திமுக உருவாக்கிய போலி பிம்பம்.. அண்ணாமலை சாடல்
Annamalai NEET Post

பாஜக தவிர தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.தவெக தலைவர் விஜய் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடக்கும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பல்வேறு வித சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை நீடித்து வருகிறது. இந்த சூழலில், இந்த முறை வெளியான நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளும், மதிப்பெண் பட்டியல்களும் தேசிய தேர்வு முகமையின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை வலுப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.முக. நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சூழலில், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் மூத்த தலைவர்களான ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினர்.

இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நீட் விலக்கு கோரி திமுக நாடகமாடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு AK ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை,தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. 

நீட் தேர்வு வந்த பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow