ரூ.4000 கோடி நில மோசடி.. கர்நாடகா அரசில் புயலை கிளப்பும் பாஜக.. சித்தராமையா சொன்ன அடடே விளக்கம்

4,000 கோடி ரூபாய் நில மோசடியில் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடகா மாநில அரசில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார். முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்திருப்பது அம்பலமாகியுள்ள நிலையில் அது தாய் வீட்டு சீதனம் என்று கூறி சமாளித்துள்ளார் சித்தராமையா.

Jul 3, 2024 - 10:58
 0
ரூ.4000 கோடி நில மோசடி.. கர்நாடகா அரசில் புயலை கிளப்பும் பாஜக.. சித்தராமையா சொன்ன அடடே விளக்கம்
karnataka cm siddaramaiah refutes land scam allegations

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சி தொடங்கியதில் இருந்தே மாநில அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள்  பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களை கூறி அனலை கிளப்பி வருகின்றனர். அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாகவும், முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திராவிற்கு அதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த 187 கோடி ரூபாய் முறைகேடு சித்தராமையா அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு பிரச்னையில் இருந்து கர்நாடகா அரசு மீண்டு வருவதற்குள் மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் நடந்திருப்பதாக கூறப்படும் முறைகேடு சித்தராமையா சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் சித்தராமையாவை "கோல்மால்" முதல்வர் என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர்  ஆர். அசோகா, தனது மனைவி பெயரில் சட்டவிரோதமாக இடங்கள் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முதல்வர் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார். “மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்போதுதான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. யாரைக் காக்க முயல்கிறீர்கள்” என்றும் எதிர்கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார். இந்த ஊழலை மறைக்க இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். 

நில மோசடி மற்றும் ஊழல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சித்தராமையாவின் மனைவிக்கு இடம் ஒதுக்கும் போது 50:50 பார்முலாவை ஏற்க அனுமதி வழங்கியது யார், ஏன் மேல்தட்டு பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டது என்பது குறித்தும் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். "இது தொடர்பாக யார் பரிந்துரைகளை வழங்கினர்," என்றும் எதிர்கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார்.“அமைச்சரவையின் அனுமதியின்றி, இடங்களை ஒதுக்க யார் அதிகாரம் கொடுத்தது? முதலமைச்சருக்கு தெரியாமல் இந்த பெரிய ஊழல் நடக்குமா?” என்றும் எதிர்கட்சித்தலைவர் குற்றம் சாட்டினார்.

எதிர்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா,  அசோகாவை கடுமையாக சாடினார் நிலம் யாருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.பாஜக ஆட்சிக் காலத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. எனது மனைவியின் சொத்து 3.16 ஏக்கர் ரிங் ரோடுக்கு அருகில் உள்ளது. எங்களின் 3.16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. MUDA தளங்களை உருவாக்கி விநியோகித்தது. அவர்கள் அதை எங்களிடம் திருப்பித் தர வேண்டாமா? சட்டத்தின்படி, 50:50 பகிர்வில் தளங்களை வழங்க முடா ஒப்புக்கொண்டது, என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.

அதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதித்ததாகவும், பாஜக ஆட்சியில் இருந்தபோது அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க முடாவிடம் கூறியதாகவும் முதல்வர் கூறினார்.அவர்கள் எங்களுக்கு வெவ்வேறு இடங்களில் தளங்களை ஒதுக்கினார்கள். அதில் என்ன தவறு? நாங்கள் கேட்டபோது, ​​50:50 தருவதாக முடா கூறியதால், பல்வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று கூறினார். 

மனைவி பெயரில் நிலம் ஒதுக்கப்பட்டது பற்றி கூறிய சித்தராமையா, குறிப்பிட்ட நிலத்தை எனது மைத்துனர் மல்லிகார்ஜுனா வாங்கியுள்ளார். நிலத்தை எனது மனைவிக்கு பத்திரம் மூலம் வழங்கியுள்ளார். MUDA, தெரிந்தோ தெரியாமலோ, அதை பிளாட்களாக மாற்றி மக்களுக்கு விநியோகம் செய்தது. அது முடா சொத்தாக மாறி எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தது.முடா மூலம் மைசூரு நகரில் இடம் ஒதுக்கப்பட்டதில் எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதுடன், 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், உயர்மட்ட அவசரக் கூட்டத்தைக் கூட்டி, 50:50 ஃபார்முலாவின் கீழ் விநியோகிக்கப்படும் தளங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த முறைகேடு தொடர்பாக முடா கமிஷனர் உள்பட 4 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நிலமோசடி தொடர்பாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஆதாரங்களை அழிப்பதைத் தடுக்கவே செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் குடும்ப தலையீடு குறித்து பரமேஸ்வரா கூறுகையில், குற்றச்சாட்டுகள் உண்மை என்று கருத முடியாது, விசாரணையில்தான் உண்மை தெரியவரும் என்றும் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow