கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.. என்ன புகார்?

''பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்'' என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Aug 17, 2024 - 17:22
 0
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.. என்ன புகார்?
Thawar Chand Gehlot And Siddaramaiah

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவரது மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் (MUDA) கையகப்படுத்தியது. இதற்கு பதிலாக MUDA சார்பில் பார்வதிக்கு மாற்று  நிலம் வழங்கப்பட்டது. 

பார்வதியிடம் இருந்து  கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பை விட, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் அவருக்கு வழங்கிய நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும், அதாவது 14 வீட்டு மனைகள் அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்மூலம் MUDA பலநூறு கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

ஆனால் மனைவிக்கு கொடுத்த நிகரான மதிப்புக்கே,  MUDA நிலம் வழங்கியது என்று சித்தராமையா மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும் கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது மனைவி பார்வதிக்கு வழங்கிய இந்த சொத்துக்கள் குறித்து சித்தராமையா தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் டி ஜே ஆபிரகாம், சினேகமாயி கிருஷ்ணா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடந்த மாதம் மனு அளித்து இருந்தனர். மேலும் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி டி ஜே ஆபிரகாம் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில்,  MUDA நில முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்துள்ளார். இது சித்தராமையாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் சேர்ந்து பெரும் ஊழலில் ஈடுபட்ட  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சித்தராமையா, ''என் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்தது சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை எதிர்த்து நான் நீதிமன்றம் செல்ல உள்ளேன். என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கும், ராஜினாமா செய்யும் அளவுக்கும் நான் என்ன தவறு செய்தேன்?

பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஏனெனில் எனது அரசு ஏழை மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் காங்கிரசின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow