இந்தியா

Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Jammu and Kashmir Assembly Elections 2024 : ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.

Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
jammu and kashmir

Jammu and Kashmir Assembly Elections 2024 : இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆன்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதாவது ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படுகின்றன.  இதேபோல் ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. 

ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 12ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16ம் தேதி ஆகும். 

செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடர்ந்து பேசுகையில், ''ஜம்மு-காஷ்மீரில் விரைந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் எங்களிடம் கோரிக்கை வைத்தன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலின்போது, ஜம்மு-காஷ்மீர் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். இது அந்த மாநில மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.

துப்பாக்கி தோட்டாக்களை விட வாக்குப் பெட்டிகள் மீது ஜம்மு-காஷ்மீர் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் 87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இதில் 3.71 லட்சம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். மாநில மக்கள் முழுவதும் திரண்டு வந்து முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 

நாங்கள் அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலத்துக்கு சென்று சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம். அப்போது தேர்தலை மிக விரைவாக நடத்துங்கள் என்று ஜம்மு-காஷ்மீர் மக்கள் எங்களிடம் உற்சாகமாக தெரிவித்தனர். அவர்கள் நமது நாட்டின் ஜனநாயகம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர்'' என்று கூறினார்.