கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், இதுபோன்ற கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைத்து நீண்ட காலம் அவருக்கு உணவளித்து அழகு பார்க்காமல் உடனுக்குடன் மரண தணடனை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து இருந்தனர்.
மருத்துவ மாணவியின் படுகொலை வழக்கு தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி மேற்கு வங்க சட்டப்பேரவையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம் (Aparajita Woman and Child Bill) இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி பலாத்காரம் செய்து பெண்ணை கொல்வது அல்லது கோமா நிலைக்கு தள்ளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 21 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி விசாரணையை முடிக்க வேண்டும்.
அப்படி 21 நாட்களுக்குள் விசாரணையை முடிக்காவிட்டால் எஸ்.பி மட்டத்திலான அதிகாரிகளிடம் விசாரணையை முடிக்க முடியாத காரணத்தை குறிப்பிட்டு மேலும் 15 நாட்கள் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த 15 நாட்களுக்குள் விசாரணையை கண்டிப்பாக முடிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை விரைவில் வழங்குவதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று புதிய சட்டம் கூறுகிறது. பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்டங்கள்தோறும் Aparajita Task Force என்னும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.