வறுமையால் குழந்தையை விற்ற பெற்றோர்.. வியாபாரம் நடந்தது அம்பலம்..
வியாசர்பாடியில் குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையை வைத்து வியாபாரம் நடந்தது அம்பலமாகி உள்ளது.
சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் சத்யதாஸ், சியாமளா தம்பதியினர். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. சத்யதாஸ் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு ஆறு வயதில் பீரீத்திமா என்ற பெண் குழந்தையும். இரண்டு வயதில் பிரித்திகா என்ற மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது.
மூன்றாவதாக கருவுற்று இருந்த சியாமளாவுக்கு 8 மாதம் இருக்கும் போது, இவர்களுக்கு நன்கு அறிமுகமான எண்ணூரைச் சேர்ந்த கணேஷ், சரண்யா தம்பதியினர் அணுகியுள்ளனர். அப்போது, உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அதனால் மூன்றாவதாக பிறக்கும் குழந்தையை எங்களுக்கு கொடுத்து விடுங்கள், இதற்காக இரண்டு லட்ச ரூபாய் பணம் தருகிறோம் என சத்யதாஸிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தனது மனைவியிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு சியாமளா ஒத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். அவர்களும் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை தருவதற்கு சம்மதித்து, முன்பணமாக 25 ஆயிரம் ரூபாயை வாங்கி உள்ளனர். கடந்த 6ஆம் தேதி சியாமளா பிரசவ வலி காரணமாக ராயபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்றைய தினமே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
10ஆம் தேதி அவர் டிச்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்ததும் சியாமளா, தனது தாயிடம் காண்பித்து விட்டு குழந்தையை கேட்ட கணேஷ் சரண்யா, தம்பதியை வரவழைத்து மீதி பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன் பின்பு சத்யதாஸ் அதே பகுதியில் இருந்தால் சந்தேகம் வரும் என்பதால், எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து, அங்கு சென்று விட்டனர். நான்கு நாட்களாக சுனாமி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சியாமளா தனது ஆண் குழந்தையை நினைத்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இது குறித்து தனது தாய் நாகவல்லியிடம் கூறி அழுதுள்ளார்.
அதன் அடிப்படையில் நாகவல்லி மற்றும் சியாமளா ஆகிய இருவரும் நேற்று வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி, விற்ற ஆண் குழந்தையை மீட்டு தரும்படி சியாமளா புகார் அளித்துள்ளார். குழந்தையை விற்ற பணம் 2 லட்சம் ரூபாயில், ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து விட்டு மீதி ஒரு லட்ச ரூபாயை இவர்கள் கையில் வைத்துள்ளனர்.
இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தியதில் சியாமளாவை மிரட்டி, குழந்தையை அவரது கணவர் விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து சத்யதாஸ் மீது வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் நேற்று முன்தினம் அவரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், குழந்தையை வாங்கிச் சென்ற கணேஷ், சரண்யா தம்பதியினர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், மூலக்கொத்தளம் சிதம்பரனார் தெரு பகுதியைச் சேர்ந்த பவானி 34 என்பவர் செண்ட்ரல் பகுதியில் ஸ்டீல் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர், வேலூரை சேர்ந்த குமுதா என்பவருக்கு குழந்தை வேண்டும் என்பதால், தனக்கு நன்கு தெரிந்த கணேஷ், சரண்யாவிடம் கூறி, அதற்கு பணம் தருவார்கள் என தெரிவித்துள்ளார். அப்போது தான் கணேஷ், சரண்யா இருவரும் ஏற்கனவே இவர்களுக்கு நன்கு அறிமுகமான வியாசர்பாடியை சேர்ந்த சத்யதாஸிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். அவரது வறுமையை பயன்படுத்திக் கொண்டு இரண்டு லட்ச ரூபாய் பேசி முடித்துள்ளனர்.
ஆனால் வேலூரைச் சேர்ந்த குமுதா நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை குழந்தைக்காக பவானியிடம் கொடுத்துள்ளார். அதில் பத்தாயிரத்தை பவானி எடுத்துக்கொண்டு மீதி பணத்தை கணேஷ் மற்றும் சரண்யாவிடம் கொடுத்துள்ளார். அதில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்தை கணேஷ் மற்றும் சரண்யா எடுத்துக்கொண்டு மீதி 2 லட்சம் ரூபாய் மட்டும் சத்யதாஸிடம் கொடுத்து குழந்தையை வாங்கியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் நேற்று எண்ணூர் ராமாராவ் தெருவை சேர்ந்த, கணேஷ் (39), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சரண்யா (36) மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த பவானி (34) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வேலூருக்கு சென்ற வியாசர்பாடி போலீசார், குமுதா என்பவர் யார்? குழந்தை தற்போது யாரிடம் உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?