சி.எஸ்.கே. அணிக்கு விளையாடியது கடவுள் தந்த பரிசு.. மதீஷா பதீரனா உருக்கம்
Matheesha Pathirana About Playing in CSK Team : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது கடவுள் எனக்கு தந்த பரிசு என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதீரனா தெரிவித்துள்ளார்.
Matheesha Pathirana About Playing in CSK Team : இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. சூர்யகுமார் தலைமையிலான டி20 அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சாரித் அசலங்கா தலைமையிலான இலங்கை டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில், வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதீரனாவும்(Matheesha Pathirana) இடம்பெற்றுள்ளார். மதீஷா பதீரனா 9 டி20 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள மதீஷா பதீரனா(Matheesha Pathirana), “என்னுடைய 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதை தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சென்னை அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு. ஓய்வறையில் தோனியுடம் விஷயங்களை பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகச் சிறப்பான விஷயம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவின் பதக்கம் மற்றும் தமிழக அணி வீரர்கள் குறித்து ஓர் பார்வை
மதீஷா பதீரனா 2022ஆம் ஆண்டு சென்னை சூப்பர் அணிக்காக(CSK Team) தேர்வானார். அந்த ஆண்டு 2 போட்டிகளில் விளையாடி, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல்(IPL) தொடருக்கு தேர்வான அதே ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில், இலங்கை அணிக்கு பதீரனா தேர்வானது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவுடனான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்திய அணி புதிய பயிற்சியாளர் மற்றும் சில புதிய வீரர்களுடன் களமிறங்குகிறது. இந்த கலவையான அணி வித்தியாசமாக செயல்படும். அவர்கள் உலகச் சாம்பியன் அணியாக களமிறங்குவதால் மிகுந்த சவாலாக இருக்கும்.
அவர்கள் சிறந்த அணியாக விளங்குவதோடு, திறமையும், ஊக்கமும் நிறைந்த வீரர்கள் உள்ளனர். எதிர்பாராதவிதமாக, டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஒருவேளை இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் விஷயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மதீஷா பதீரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 20 போட்டிகளில் விளையாடி, 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2022ஆம் ஆண்டு 2 விக்கெட்டுகளையும், 2023ஆம் ஆண்டு 19 விக்கெட்டுகளையும், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
What's Your Reaction?