நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி எடுத்த விஜய்.. கடைசியில் சொன்ன அந்த வார்த்தை.. கவனிச்சீங்களா?

இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து நெஞ்சில் கை வைத்து உறுதிமொழியை அவர் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் கடைசியாக சொன்ன வார்த்தை தற்போது அவரது ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Aug 22, 2024 - 13:16
 0
நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி எடுத்த விஜய்.. கடைசியில் சொன்ன அந்த வார்த்தை.. கவனிச்சீங்களா?
vijay tv pledge

தமிழக வெற்றிக்கழகத்தின்  கொடியை ஏற்றி வைத்து கட்சி பாடலை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய் இன்று தனது நெஞ்சில் கை  வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவர் உளமாற என்று சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

உறுதிமொழியை விஜய் முன் மொழிய தொண்டர்கள் வழி மொழிந்தனர். நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி மதசார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் உறுதிமொழியின்  இறுதியில் உளமார உறுதி கூறுகிறேன் என்று  குறிப்பிட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக நிறுவனர் அண்ணாதான் இதற்கு விதை போட்டவர். கடந்த 1967ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பு வரை அனைவரும் 'கடவுள் அறிய' அல்லது 'இறைவனின் பெயரால்' என்று குறிப்பிட்டே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். ஆனால், திராவிட கருத்துகளைக் கொண்ட அண்ணா கடவுள் அறிய என்ன சொல்லி சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவில்லை. மாறாக 'உளமார' என்று சொல்லி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதற்கு அப்போது அண்ணா ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார். அதாவது கடவுளின் பெயரால் என்று சொல்லிப் பதவியேற்றால்.. பரிகாரம், காணிக்கை கொடுத்து சமரசம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால், உளமார என்று சொன்னால் மனசாட்சியுடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்று விளக்கமளித்திருந்தார்.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரும் அண்ணா பாதையில் உளமார என்று சொல்லியே உறுதிமொழி ஏற்றனர். இருப்பினும் 1991இல் முதல்முறையாக ஆட்சி அமைத்த ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று சொல்லி உறுதிமொழி ஏற்றார். இருப்பினும், அப்போது அதிமுகவில் இருந்த மூத்த தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உளமார என்று சொல்லியே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் உளமார என்று சொல்லி பதவியேற்றுக்கொள்கின்றனர்.

அதிமுக ஆட்சிக்கு வரும் போது கடவுள் மீதும் உறுதிமொழி ஏற்பது தொடர்ந்தது. ஜெயலலிதாவுக்குப் பிறகு வந்த ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் கடவுள் மீதே உறுதிமொழி ஏற்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த போது ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கும் போது உளமார என்று சொல்லியே உறுதிமொழி ஏற்றார். 

இப்படி தமிழக அரசியலில் உளமார என்று கூறி உறுதிமொழி எடுப்பதற்குப் பின்னால்  சர்வதேச அளவிலும்  ஒரு வரலாறு இருக்கிறது. பிரிட்டனில் கடந்த 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியான சார்லஸ் பிராட்லா அடிப்படையில் ஒரு நாத்திகர். இவர் 1880இல் நடந்த தேர்தலில் நார்த்தாம்ப்டனிலிருந்து எம்பியாக தேர்வானார். தீவிர நாத்திகராக இருந்ததால் அவர் எம்பியாக பதவியேற்கும் போது, கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் அவரை எம்பியாக அங்கீகரிக்கப் பிரிட்டன் நாடாளுமன்றம் மறுத்துவிட்டது.இல்லாத கடவுளைச் சாட்சியாகப் பதவியேற்க முடியாது என்ற பிராட்லா, தனது வெற்றியை ரத்து செய்வது பிரிட்டன் மக்களின் ஜனநாயக உரிமைகளை இழிவு செய்யும் செயல் என்று விமர்சித்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் அவரை பதவியேற்கச் சம்மதித்தது. மேலும், 1886 முதல் கடவுளின் பெயரால் உறுதிமொழியேற்கத் தயங்குபவர்கள் உளமார அல்லது மனசாட்சியின்படி உறுதியேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இப்போது பதவி பிரமாணம் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் கொடியை அறிமுகம் செய்து வைத்து உறுதிமொழி எடுத்த போது கடவுள் மீது ஆணையாக என்பதற்குப் பதிலாக உளமார என்று கூறி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  விஜய் தேர்வு செய்திருப்பது ஆன்மீக அரசியலா? அல்லது நாத்திக அரசியலா? எந்த பாதையில் பயணிக்கப் போகிறார் என்று கட்சியின் கொள்கையை அறிவித்தால் மட்டுமே  தெளிவாகத் தெரியவரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow