ஜூனியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சீனியர்களின் மவுஸை குறைக்கும் தலைமை!

2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

Aug 19, 2024 - 15:25
Aug 19, 2024 - 15:28
 0
ஜூனியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சீனியர்களின் மவுஸை குறைக்கும் தலைமை!

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே வேலைகளை தொடங்கிவிட்டது திமுக தலைமை… இந்த தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு ஒன்று கடந்த ஜூலை மாதம் அமைக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகிய ஐவர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு கொடுத்துள்ள ரிப்போர்ட்டின் அடிப்படையில், ஏற்கனவே கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் இருந்த நிலையில், மாவட்டங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

ஏற்கனவே உள்ள 72 மாவட்டங்களில், மூத்த அமைச்சர்களுக்கு 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு இருந்துவருகிறது. அதேபோல், மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான், நம் குமுதக் செய்திகள் ஏற்கனவே கூறியிருந்ததுபோல 2 சட்டமன்றத் தொகுதிகளை ஒரு மாவட்டமாக மாற்றி, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் தலைநகர் சென்னையில் 3 சட்டமன்றங்களை ஒரு மாவட்டமாக பிரிக்க ஒருங்கிணைப்பு குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஆ.டி.சேகர், மாதவரம் எஸ்.சுதர்சனம், பி.கே.சேகர்பாபு, நே.சிற்றரசு, மயிலை த.வேலு, மா.சுப்ரமணியன் என 6 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதில் கிழக்கு மாவட்டச் செயலாளரான சேகர்பாபுவும், தெற்கு மாவட்டச் செயலாளரான மா.சுப்ரமணியனும் அமைச்சர்களாக உள்ள நிலையில், இவர்கள் கட்டுப்பாட்டில் தலா 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவர்களின் கட்டுப்பாட்டில் சில பெரிய தொகுதிகள் இடம்பெறுவதால், அதனை அவர்களால் நிர்வகிக்க முடியாமல் திணறுவதாகக் கூறப்படுகிறது. ஆதலால், அந்த பெரிய தொகுதிகளை ஒரு மாவட்டமாக மாற்றி அதற்கென்று தனி மாவட்டச் செயலாளரை நியமிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.

அதனடிப்படையில் சென்னையில் புதிதாக உருவாகும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கே.கே.நகர் தனசேகரனும், விருகம்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவான பிரபாகர் ராஜாவும் மோதிக் கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரபாகர் ராஜாமீது தொகுதி மக்களிடையே அதிருப்தி நிலவுவதால் தனசேகரனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டலாம் என்று பேசப்படுகிறது. அதேபோல் சென்னையின் பெரிய தொகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்கென்று தனி மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த ரேசில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ அரவிந்த ரமேஷ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படி சென்னையின் மாவட்டச் செயலாளர்கள் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவிவரும் நிலையில், காஞ்சிபுரத்திலும் மிகத் தீவிரமாக மா.செ பதவிக்கு காய் நகர்த்தப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரத்தின் வடக்கு மாவட்டச் செயலாளராக தா.மோ.அன்பரசன் இருக்கும் நிலையில், இந்த மாவட்டத்தை பிரித்து வேறு முக்கிய நபருக்கு வழங்க தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மதுரவாயல் எம்.எல்.ஏவாக உள்ள காரப்பாக்கம் கணபதிக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.எல்.ஏ சுந்தரிடம் இருந்து அதிகாரத்தை இரண்டாக பிரிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாம். 

சென்னை, காஞ்சிபுரம் மட்டுமல்ல திமுக அமைப்பு ரீதியாக பிரிந்துள்ள 72 மாவட்டங்களையும் பிரித்து மொத்தமாக 117 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனியர்களை தவிர்த்து, சுணக்கமாக வேலைப் பார்க்கும் மா.செக்களை தூக்கிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிதாக நியமிக்கப்பட உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் உதயநிதி ஸ்டாலின் கைக்காட்டும் இளைஞரணியைச் சேர்ந்த நபர்களாகவே இருக்க அதீத வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி திமுக தலைமை எடுத்துள்ள முடிவென்பது ஜூனியர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும், சீனியர்களை சீண்டும் விதமாகவே அமைந்துள்ளது. காலாகாலமாக தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சட்டமன்றத் தொகுதிகளுக்காக கட்சியின் சீனியர்கள் அத்துணை உழைப்புகள் போட்டும், அவர்களிடம் இருந்து தொகுதிகளை திமுக தலைமை பறிப்பது தலைமைக்கும் சீனியர்களுக்கும் இடையே மனகசப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக மாவட்டச் செயலாளராக உள்ள அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் தல 5 தொகுதிகள் இருந்த நிலையில், அத்தொகுதிகளை பிரிக்கும் பட்சத்தில் அமைச்சர்களின் மவுஸ் குறையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு, உதயநிதியை உயர்த்திக் காட்டுவதற்காக, கட்சிக்காக உழைத்த சீனியர்களின் பவரை குறைப்பது கட்சிக்குள் பல்வேறு சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமையின் இந்த முடிவிற்கு கட்சி சீனியர்களின் நியாக்ஷன் என்னவாக இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow