2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கட்சியின் உறுப்பினர்களின் சேர்க்கையை ஆன்லைன் மூலம் தீவிரப்படுத்தினார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் அதிகமானது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை தனது தாய் தந்தை முன்னிலையில் வெளியிட்டார் விஜய்.
கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை பூ, யானை, என வெற்றியை பிரதிபலிக்கும் விதமாகவே இருக்கிறது கட்சியின் கொடி. மேலும், தமன் இசையில் வெளியான தவெகவின் பாடலில், ”இது ஆளபோற தமிழன் கொடி” போன்ற மாஸ் வரிகள் இருந்தது. இதனயடுத்து தவெக கட்சியின் உறுதிமொழியை ஏற்றார் விஜய்.
முன்னதாக, அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இன்று முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும் என்று குறிப்பிடுள்ளார். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாக நம் கொடி மாறப் போகுது என்றும் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேமுதிக கட்சி பொறுப்பாளர் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “விஜய் நேரில் வீட்டிற்கு வந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுதான் சென்றார். இன்றைக்கு கொடி அறிமுகம். மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்த பிரேமலதா, “குற்றவாளிகள் மனிதர்களே கிடையாது. மனித மிருகங்கள்.. இதுபோன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை தவிர, வேறு எந்த தண்டனையும் கொடுக்க முடியாது. அப்பொழுது தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். தயவு தாட்சணையே பார்க்கக் கூடாது” என்றார்.