தீரா உலா 2: தவாங் யுவதியும் மேஜிக் மொமண்ட்ஸும்

குவஹாத்தியில் இருந்து தவாங் சராசரியாக ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. பேருந்துப் பயணம் என்கையில் இதனை நெடுந்தொலைவு என்று சொல்லி விட முடியாதுதான்.

Aug 11, 2024 - 13:30
Aug 11, 2024 - 01:17
 0
தீரா உலா 2: தவாங் யுவதியும் மேஜிக் மொமண்ட்ஸும்

இருந்தாலும் மலைப்பகுதிக்குச் செல்கையில் தொலைவைக் கொண்டு மட்டும் பயணத்தைத் தீர்மானிக்க முடியாது. சாலை நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்பாதையின் ஏற்றங்கள், வளைவுகள், எதிர்ப்படும் வாகனங்கள் என அனைத்துமே பயண நேரத்தைத் தீர்மானிப்பவை. அடுத்த நாள் அதிகாலையில்தான் பேருந்து தவாங் நகரைச் சென்றடையும் என்றனர். கிட்டத்தட்ட ஒரு முழு நாளை பேருந்திலேயே கழிக்க வேண்டும் என்பதில் எனக்கு சலிப்பேதும் இருக்கவில்லை. அன்றைய இரவு விடுதி வாடகைக்கான தொகை மிச்சம் என்கிற மகிழ்ச்சிதான் இருந்தது. அசாம் மாநிலத்தை மேல் அசாம், கீழ் அசாம் என இரண்டாகப் பிரிக்கிறார்கள். கீழ் அசாமில்தான் எனது பயணம் நிகழ்ந்தது. குவஹாத்தியில் இருந்து அசாமின் இன்னொரு முக்கிய நகரான தேஜ்பூர் வழியாக பேருந்து தவாங் சென்றது. தவாங் பயணத்துக்குத் தேவையான இரண்டு முக்கியமான விஷயங்களை நான் செய்திருக்கவில்லை.

முதலாவது ஐ.எல்.பி (Inner Line Permit). இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்துக்குச் செல்கிறவர்கள் அவசியம் நமது அடையாள அட்டையைக் கொடுத்து இந்த அனுமதிச்சீட்டினை வாங்க வேண்டும். இதனை இணையத்திலேயே விண்ணப்பித்துப் பெற முடியும். நான் இதற்கு முந்தைய ஆண்டு தவாங் சென்றபோது, சுமோவில் போனேன். அனுமதிச்சீட்டு பெறுவதற்கான நடைமுறைகளையெல்லாம் சுமோ ஓட்டுநரே பார்த்துக் கொண்டார். இம்முறை பேருந்தில் போனதால் அனுமதிச்சீட்டு  வாங்குவது பற்றிய உணர்வே இல்லை. வடகிழக்கு மாநிலங்களிலேயே அனைத்து விதங்களிலும் செழுமையான மாநிலமான அசாமின் பல ஊர்களைக் கடந்து சென்ற பேருந்து, அருணாச்சலப்பிரதேச எல்லைக்குள் நுழையும்போது மாலை ஆகி விட்டது. இருள் கவிந்து கொண்டிருந்த வேளையில் அருணாச்சல் காவல் துறையினர் பேருந்தினுள் ஏறி பரிசோதனை மேற்கொண்ட போது, அனுமதிச்சீட்டு இல்லாத பயணியாக நான் மட்டுமே இருந்தேன். ஆகவே என்னை இறங்கச் சொல்லி, சற்று தள்ளியிருந்த ஒரு ஜெராக்ஸ் கடைக்குச் சென்று பெர்மிட் எடுத்து வரும்படி சொன்னார்கள். ஆதார் அட்டை நகலைக் கொடுத்து 150 ரூபாய் பணம் கட்டி பெர்மிட் வாங்கி வந்த பிறகு பேருந்து புறப்பட்டது.

இமயமலைப் பயணம் என்று தெரிந்தும் ஜெர்க்கின் எடுத்து வராததது எனது இரண்டாவது பிழை. போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியம் என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும். அருணாச்சல் எல்லைக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்திலேயே மலையேற்றம் ஆரம்பித்து விட்டது. மேலே செல்லச் செல்ல குளிர் ஏறிக்கொண்டே போனது. பேருந்தின் ஜன்னல்களைச் சாத்தியிருந்தாலும் ஜன்னல் இடுக்கின் வழியாக குளிர் ஊடுருவித் துளைத்தது. சட்டை மற்றும் டி சர்ட்களை எடுத்து அடுக்கடுக்காக போட்டுக் கொண்ட பிறகும் அக்கடுங்குளிரை எதிர்கொள்ள முடியவில்லை. பேருந்தில் இருந்த அனைவரும் ஜெர்க்கின் அணிந்து போர்வை போர்த்தி கதகதப்பாக தூங்கிக் கொண்டிருந்தனர். நான் குளிரின் முரட்டுத் தாக்குதலை எதிர்கொள்ளவியலாது திணறிக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இந்தக் குளிரை என்னால் வென்றெடுக்க இயலாது என்பது உறுதிபடத் தெரிந்ததும் ஓட்டுநரிடம் சென்று போர்வை கேட்டேன். மிகச்சன்னமான ஒரு போர்வைதான் அவர்கள் வசம் இருந்தது. அது ஓரளவு குளிரைக் கட்டுப்படுத்தியதால்தான் தூங்கவே முடிந்தது.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பேருந்து தவாங் நகரை அடைந்தது. முந்தைய ஆண்டுப் பயணத்தில் தவாங் நகர ஆர்ச்சை ஒட்டியிருந்த ஒரு விடுதியில் 400 ரூபாய் வாடகைக்குத் தங்கியிருந்தேன். இம்முறையும் அதே விடுதியில் தங்கவே திட்டமிட்டிருந்தேன். விடுதி நிர்வாகியான சோனம் கேனாவைப் பற்றி எனது முந்தைய பயண அனுபவ நூலில் குறிப்பிட்டிருப்பேன். சூட்டிப்பானவள். நிறைய ரீல்ஸ் செய்து வாட்ஸாப் ஸ்டேட்டஸில் வைப்பாள். அதிலும் குறும்புத்தனமான புன்னகை மேலோங்கியிருக்கும். தமிழ் தெரியாத போதும் நினைவாக என் சிறுகதைத் தொகுப்பினை கேட்டு வாங்கிக் கொண்டாள். அவளைப் பற்றி எழுதிய நூலை இப்பயணத்தில் அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவளைத் தொடர்பு கொள்கையில் விடுதி நிர்வாகம் கைமாறி விட்டதாகவும், தான் இப்போது தவாங் நகரில் இல்லை என்றும் சொன்னாள். புதிய நிர்வாகம் பற்றி எனக்குத் தெரியாததால் எங்காயினும் விடுதியைத் தேடிப் பிடிக்க இறங்கினேன். 

பயணக்களைப்பு என்னை அழுத்தியிருந்தது. குறைந்த வாடகையில் விடுதி தேடித் திரிவதற்கு சலிப்பாக இருந்தது. பேருந்து நிறுத்தத்துக்கு அருகே இருந்த ஒரு விடுதியில் அறை தேடிப் போனேன். விடுதியின் முகப்புத் தோற்றத்தை வைத்தே எப்படியும் எனது பட்ஜெட்டில் கிடைக்காது என்பது தெரிந்தது. இருந்தும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கை என்னவென்றால், விடுதி வாடகை என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. கால சூழலுக்கு ஏற்றாற்போல தளர்த்தப்படும் ஒன்றுதான். ஒரு அக்டோபர் மாதத்தில் மூணாருக்குச் சென்றிருந்த போது, 1500 ரூபாய் வாடகைக்கு விடப்படும் அறை எனக்கு 500 ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டது. அது போல இங்கும் நடப்பதற்கான சாத்தியங்களின் மீதான நம்பிக்கையில் சென்றேன். விடுதியின் வரவேற்பில் இருந்தவன் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் வாடகை சொன்னான். அவனிடம் என் பயணத்தைப் பற்றி விவரித்தேன். ‘தவாங் ஹாலிடே’ என்கிற விடுதியில் நான் சொல்லி விடுகிறேன். நீங்கள் எதிர்பார்க்கிற குறைந்த வாடகையில் அறை தருவார்கள் என்று சொன்னான். அந்த விடுதிக்கு எதிர்ப்புறத்தில் தனது உணவகம் இருப்பதாகவும், சாப்பிட அங்கு வரலாம் என்றும் சொன்னான். அவன் பெயர் ‘துஹார்’ அவனது எண்ணைக் குறித்துக் கொண்டு விடைபெற்றேன்.

தவாங்கில் சமதளப்பாதையே கிடையாது. ஏற்ற இறக்கங்களாலான அந்த மலை நகரத்தில் நடப்பதற்கு கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். அங்கிருந்து தவாங் ஹாலிடே விடுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றேன். இந்த விடுதியிலும் வாடகை ஆயிரத்துக்கும் அதிகமானதுதான். விடுதியின் கீழ்த்தளத்தில் லாரி ஓட்டுநர்கள் தங்கும் அறையை 400 ரூபாய் வாடகைக்குக் கொடுத்தார்கள். இணைப்புக் கழிவறை இல்லை. வெளியே பொதுக்கழிவறைதான் இருந்தது. அறையில் மிக மெல்லிய வெளிச்சமே ஊடுருவியிருந்தது. எனக்கு அந்த அறை அறவே பிடிக்கவில்லை. ஒளி விரவாத இடத்தில் ஏனோ மனம் இருப்பு கொள்ள விரும்புவதில்லை. பகல் நேரத்து இருள் அச்சம், வெறுமையைத் தரவல்லது. ஒளிதான் உறுதியையும், உத்வேகத்தையும் கொடுக்கும். வேறு அறை தேடுமளவுக்கு உடலில் வலு இல்லை. இருந்த களைப்புக்கு அப்படியே போர்வையை இழுத்துப்போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காட்டிலும் நிறைவளிக்கக்கூடிய செயல் வேறொன்றுமில்லை எனத் தோன்றவே அந்த அறையை வாடகைக்கு எடுத்து விட்டேன்.

கனமான போர்வைக்குள் என்னைத் திணித்துக் கொண்டு மூன்று மணி நேரம் தூங்கினேன். பெருஞ்சோர்வுக்குப் பிறகான உறக்கம், கொடும்பசியில் உண்ணும் உணவு இவற்றுக்கு நிகராக பேரிளம் பெண்ணுடனான காமத்தைக் கூட வைக்க முடியாது. மதிய உணவுக்காக வெளியே வந்த போதுதான் கவனித்தேன் பஜாரில் அனைத்துக் கடைகளும் அடைத்திருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை கூட இல்லாத நிலையில் ஏன் இந்த நகரம் மௌனமாகக் கிடக்கிறதெனப் புரியவில்லை. வழியில் தென்பட்டவரிடம் விசாரித்த போது அரசியல் பிரமுகர் சார்பில் வியாபாரிகள் சங்கம் மூலமாக அனைத்து வியாபாரிகளும் பிக்னிக் சென்றிருக்கிறார்கள் என்கிற தகவல் தெரிந்தது. ‘வெளங்குச்சு’ என்று நினைத்தபடியே திரும்ப துஹார் நடத்தும் உணவகத்தில் சாப்பிட்டேன். முந்தைய பயணத்தைக் காட்டிலும் இப்போது குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்றைக்கு ஜெர்க்கின் வாங்கியே தீர வேண்டிய கட்டாயம் அதனால் உண்டாகியது. பிரதான பஜாரைத் தாண்டி கீழே இறங்கினேன். சோனம் கேனா நிர்வாகியாக இருந்த விடுதிக்கு அருகே ஜெர்க்கின் விற்கும் கடை திறந்திருந்தது. பும்லா பாஸ் செல்லும் திட்டம் இருந்தபடியால் மைனஸ் 10 டிகிரி வரை தாங்கும் ஜெர்க்கினைத் தேடினேன். கருப்பு நிறத்தில் கனமான ஜெர்க்கின் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். அதன் உட்புறம் சாம்பல் நிறத்தில் இருந்தது. விற்பனையாளர் உட்புறத்தை அப்படியே வெளியே திருப்பி இதன் இருபுறங்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றவர் இதன் விலை 3700 ரூபாய் என்றார். பேரம் பேசுவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். என் அம்மாவாக இருந்திருந்தால் ஆயிரம் ரூபாயிலிருந்து பேரத்தைத் தொடங்கியிருப்பார். எனக்கு அவ்வளவு துணிச்சல் இல்லை என்பதால் 2 ஆயிரம் ரூபாயில் முடிக்கப் போராடினேன். கடைக்காரர் உறுதியாக நின்றபடியால் 2,600 ரூபாய்க்கு வாங்க வேண்டியதானது.

அந்தச் சாலை முனையிலேயே மதுபானக்கடை இருந்தது. தவாங்கில் தோராயமாக ஏழெட்டு மதுபானக்கடைகள் இயங்குகின்றன. அவை எவற்றிலும் தமிழ்நாட்டைப் போல மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்ததில்லை. மக்கள்தொகை மிகக்குறைந்த நகரம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இம்மக்கள் மதுவை பெருங்கொண்டாட்டமாகப் பார்ப்பதில்லை என்றே பட்டது. குளிரின் பாகை குறைகிற இரவு வேளையில்தான் அநேகம் பேர் மது அருந்துகின்றனர். குறிப்பாக ரம் நுகர்வு இங்கு அதிகம். அன்றைக்கு எங்கேயும் சுற்றுவதற்கான திட்டம் இல்லை என்பதால் ஒரு ஃபுல் ஓல்ட்மங்க் ரம்மை வாங்கினேன். அதன் விலை 190 ரூபாய். தமிழ்நாட்டை விட நான்கு மடங்கு விலை குறைவு என்பதே சாதகமான அம்சம். இரண்டு சுற்று அருந்தியபிறகு மெல்லிய கதகதப்பை உணர்ந்தேன்.

தவாங்கில் ஜியோ நெட்வொர்க் வேலை செய்யாது என்பதால் பயன்பாட்டில் இல்லாத எனது வோடஃபோன் எண்ணை உயிர்ப்பித்தேன். அப்படியிருந்தும் எனது அறையில் வோடஃபோன் அலைவரிசையும் கிடைக்கப் பெறாததால் வேறு அறை பார்த்தாக வேண்டிய தேவை உருவானது. அடுத்த நாள் முதல் வேளையாக சோனம் கேனாவின் விடுதிக்குச் சென்றேன். புதிய நிர்வாகம் என்றாலும் வாடகையில் எந்த மாற்றமும் இல்லை. 300 ரூபாய் வாடகையில் அறை கிடைத்தது. இணைப்புக்கழிவறை இல்லை என்றாலும் முற்றத்தை ஒட்டியிருந்த அறை என்பதால் சாளரத்தின் வழியே ஒளி பரவிப் பிரகாசமாய் இருந்தது. இரண்டு மரக்கட்டில்கள், அவற்றின் மேல் மெலிந்த மெத்தைகள், கம்பளிப் போர்வைகள். இதற்கும் மேல் எதுவும் தேவைப்படவில்லை.  

நான் விடுதி மாறி விட்டதை துஹாரிடம் தெரிவித்தேன். அவன் அது ஒன்றும் பிரச்னை இல்லை ஆனால் நீங்கள் என் உணவகத்தில் சாப்பிடுவதுதான் எனக்குத் தேவை என்றான். எனது பயணத்தில் முதல் முறையாக ஒரு நல்ல வியாபாரியுடன் நட்பு பாராட்டினேன் என்றால் அது துஹார்தான். தகரத்தால் வேயப்பட்ட துஹாரின் உணவகத்தில் அமர்ந்து ஒரு சுற்று ரம் குடித்து விட்டு வெளியே வந்த போது பனிப்பொழிய ஆரம்பித்திருந்தது. சுண்ணாம்புக் கற்களைப் போல கொட்டிய பனித்துளிகள் மேலே பட்டுத் தெறிப்பதை ரசித்தபடியே அறைக்கு வருகையில் இருட்டுக் கட்டி விட்டது. மழையும் பெய்யத் தொடங்கியது.

மழை பெய்து ஓய்ந்ததும் விடுதியின் முற்றத்தில் கூட நிற்க முடியாத அளவு கடுங்குளிர். அறைக்குள் முடங்கியதும்தான் கொஞ்சம் வெதுவெதுப்பாய் இருந்தது... கொஞ்ச நேரத்தில் கண்ணாடிச் சாளரத்தில் வெளியே பார்த்த போது மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது. மார்ச் மாதம் தவாங்கில் பனிப்பொழிவு இருக்காது என்றே நினைத்திருந்தேன். தவாங்கின் விருந்தாளியான என்னை வரவேற்கவே இந்தப் பூமழை பொழிவதாக நினைத்துக் கொண்டேன். அந்தப் பனி விழும் இரவில் நனைந்த படியே அந்நகரில் சிறிது தூரம் நடந்து திரிய வேண்டி அறையைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் பும்லா பாஸ் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இறங்கினேன். தவாங்கிலிருந்து பும்லா பாஸ் செல்வதற்கு எந்தப் பொதுப்போக்குவரத்தும் கிடையாது. பெர்மிட் வாங்கிக் கொண்டு நமது சொந்த வாகனத்தில் செல்லலாம். இல்லையென்றால் பைக் வாடகைக்கு எடுத்தோ அல்லது டாக்சியிலோதான் போய் வர முடியும். இப்பயணத்துக்கான டாக்சி என்றால் டாடா சுமோ அல்லது அதையொத்த வாகனங்கள்தான். இதற்கு ஆள் கணக்கு இல்லை எத்தனை பேர் சென்றாலும் இதன் நிர்ணயிக்கப்பட்ட வாடகை ₹5500. ஒரு டாக்சியில் ஓட்டுநர் அல்லாது 5 பேர் தாராளமாக பயணிக்கலாம். ஆக, ஒரு டாக்சியை என்னுடன் பகிர்ந்து கொள்ள நான்கு பேர் கிடைத்தால் தலைக்கு 1100 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் அரிதினும் அரிது என்றே அனைவரும் சொன்னார்கள். டாக்சியைப் பகிர்ந்து கொள்ளும் தேவையுடைய பயணிகள் வந்தால் அழைக்குமாறு ட்ராவல் ஏஜென்சியில் எனது எண்ணைக் கொடுத்து விட்டு வந்தேன்.

அடுத்ததாக பைக் வாடகைக்கு விடும் இடத்துக்குச் சென்று விசாரித்தேன். ஒரு நாளைக்கான ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக்கின் வாடகை ₹1700, பும்லா பாஸ் செல்வதற்கான பெர்மிட்  ₹300 என மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் கேட்டனர். ₹500 க்கு பெட்ரோல் போட்டால் கூட மொத்தம் 2500 ரூபாய் ஆகும். இந்தக் கணக்கை வகுத்தபடியே வந்து கொண்டிருந்த போது கார் டாக்சிக்காக பேசி வைத்திருந்த ஏஜென்சியிலிருந்து அழைப்பு வந்தது. ஒரே ஒரு நபர் மட்டும் டாக்சியைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார் என்றும், ஆளுக்கு ₹2500 கொடுத்தால் போதும் எனவும் கூறினர். தவாங்கிலிருந்து பும்லா பாஸ் 38 கி.மீ. எந்நேரமும் பனிப்பொழிவு மிக்க அந்த மலைப்பாதையில் பைக்கில் செல்வது சாகச அனுபவமாக இருக்கும். இப்பயணத்துக்கு மூன்று மாதம் முன்னராகத்தான் சிறிய விபத்தில் எனது இடது கை மூட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. ஒன்றரை மாதங்கள் மாவுக்கட்டு போட்டு குணமாகி வந்தேன். அப்படியிருந்தும் முழுவதுமாக குணமடையவில்லை. இந்த சூழலில் எந்த வறட்டு சாகசங்களிலும் ஈடுபட மனம் ஒப்பாததால் பைக்கில் செல்லும் முடிவைக் கைவிட்டு டாக்சி ஷேரிங்குக்கு ஒப்புக்கொண்டேன். ஆகாஷ் என்கிற இளைஞன் என்னுடன் டாக்சியைப் பகிர்ந்து கொள்ள வந்திருந்தான். பணத்தைக் கட்டி ரசீதைப் பெற்றுக் கொண்டேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு இங்கிருந்து கிளம்ப வேண்டும் ஏனெனில் பும்லா பாஸில் பனிப்பொழிவு மிகுந்து சாலையை நிரப்பி விடும் அபாயம் இருப்பதால் நண்பகல் 12 மணிக்குள்ளாக திரும்பியாக வேண்டும் என்று சொன்னார்கள்.

தவாங் வந்ததன் நோக்கமே பும்லா பாஸ் செல்வதுதான். அப்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்து விட்ட நிறைவோடு எனது விடுதிக்கு எதிரே இருந்த உணவகத்துக்குச் சென்றேன். சோற்றைப் பார்த்தே வெகுநாளாகி விட்ட உணர்வு மேலெழுந்தது. பயணம் தொடங்கிய நாளிலிருந்தே ரொட்டி, பூரி, ஆலு பரோட்டா, சௌமிங் என்றே சாப்பிட ஆரம்பித்து விட்டேன். இன்றைக்குச் சோறுண்ண வேண்டும் என்கிற முடிவோடு வந்து 'சிக்கன் தாளி' தரும்படி கேட்டேன். அது தீர்ந்து போய் விட்டபடியால் 'வெஜ் தாளி' கொடுத்து சிக்கன் வறுவல் தனியாகக் கொடுத்தனர். வழக்கமான டால் மற்றும் உருளைக்கிழங்கு சப்ஜிதான். சிக்கன் வறுவலோடு சேர்த்து சாப்பிட கொஞ்சம் தேறியது. இந்த உணவகத்தை மூன்று பெண்கள் நடத்துகின்றனர். அவர்களில் ஒருத்தி என்னை மிகவும் ஈர்த்தாள். அப்பிரதேசத்துக்கே உரித்தான மங்கோலியச்சாயல் பதிந்த அவளது முகம் அடிஸ்கேல் கொண்டு அளவெடுத்து வரைந்ததைப் போல மிகத்தெளிவாக இருந்தது. அச்சில் வார்த்தாற்போல் என்கிற உவமைக்குப் பொருத்தாமான முகம் அவளுடையதுதான். கவராயத்தைக் கொண்டு கோடு கிழித்தாற்போன்ற சீரான அளவிலான புருவங்கள். நன்கு விரிந்த கண்கள், புன்னகைக்க மறவாத உதடுகள். இரண்டு நாட்களில் என்னுள் பதிந்த சித்திரம் இதுதான். அன்றிரவு மீண்டும் அவ்வுணவகத்துக்குச் செல்கையில் 180மிலி மேஜிக் மொமண்ட்ஸ் வோட்காவோடு போனேன். முன்பே சொன்னதைப் போல தவாங்கில் மது பற்றியான எந்தப் பதற்றமும் கிடையாது. உணவகங்களிலேயே மது அருந்தலாம் என்பதோடு அங்கேயே மது விற்பனையும் செய்யப்படுகிறது. என்ன கொஞ்சம் விலை கூடுதலாக இருக்கும். நான் வோட்கா அருந்த கிளாஸ் கேட்ட போது,
 
“நாங்களே விற்கிறோம் ஏன் வெளியிலிருந்து மது வாங்கி வருகிறீர்கள்” என்று அவள் கேட்டபடியே கிளாஸைத் தந்தாள்.

“சரி உங்களுக்காக இனி இங்கேயே வாங்குகிறேன்” என்றபடி புன்னகைத்தேன். அவளும்தான்.

பயணம் என்று வருகையில் எந்நேரமும் மனம் விழிப்புநிலையிலேயேதான் இருக்கிறது. அடுத்த நாள் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி 5 மணி என்கிற போதெல்லாம் பஜாரின் மையப்பகுதிக்குச் சென்று விட்டேன். என்னுடன் வரப்போகிற ஆகாஷ் அவனது அப்பாவுடன் அங்கு காத்திருந்தான். சற்றைக்கெல்லாம் புத்தம் புதிய ஸ்கார்பியோ வந்து நின்றது. முன்புற இருக்கையை நாங்கள் இருவருமே விட்டுத்தரத் தயாராக இல்லை. முன்புற இருக்கையில் அமர்ந்தால்தான் விசாலாமாக நிலக்காட்சிகளைப் பார்க்க முடியும். அப்படியொரு அனுபவத்தை ஒரு பயணி ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும். பும்லா பாஸ் செல்கிற போது நானும், திரும்பி வருகையில் ஆகாஷும் முன் இருக்கையில் அமர்வதென முடிவு செய்து விட்டு ஸ்கார்ப்பியோவில் ஏறினோம். தவாங்கைத் தாண்டி மலைப்பாதையில் சுமோ சீறிக்கொண்டு போனது. சிறிது தொலைவுக்கு அப்பால் சாலையின் டயர் தடத்தைத் தவிர காணும் திசையெங்கும் வெண்மை விஸ்தாரமாகப் பரவியிருந்தது. மலைக்குன்றுகளில் சிற்சில இடங்களைத்தவிர அனைத்துப் பகுதிகளிலும் பனி கொட்டி மூடியிருந்தது. ஆங்காங்கே பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. 

தவாங்கிலிருந்து 16 கிமீ தொலைவு சென்றதும் ஓட்டுநர் சுமோவை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு வெளியே தெரிவதுதான் ‘பி.டி சோ லேக்’ என்றார். நானும் ஆகாஷும் ஸ்கார்பியோவில் இருந்து இறங்கினோம். அங்கே ஏற்கனவே சுமோவில் வந்த பயணிகளும் பைக்கர்களும் நின்று புகைப்படம் எடுத்தபடி இருந்தனர். அந்த ஏரியின் பெரும்பகுதி பனிப்பொழிவில் மூடப்பட்டிருந்ததால் சாலையில் இருந்து கீழே இறங்கிச் செல்ல முடியவில்லை. ஏரியின் உள்ளே படகுகள் மிதந்து கொண்டிருந்தன. ஏரியின் மறுகரைக்குச் செல்ல மரத்தாலான சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்ததை மேலிருந்தே பார்க்க முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்து விட்டு ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டோம். பி.டி சோ லேக் என்று சொல்லப்படுகிற இந்த ‘பங்கா டெங் த்சோ ஏரி’யின் அழகைக் காண வேண்டுமென்றால் பனிக்காலம் அதற்கு உகந்ததல்ல. வானத்தின் நீலத்தைப் பிரதிபலிக்கும் ஏரியின் நீர்ப்பரப்பை, சுற்றியிருக்கும் மலைகளின் பசுமையோடு சேர்த்துக் காண்கையில்தான் இந்த ஏரியின் அழகை முழுமையாக ஸ்பரிசிக்க முடியும்.

அங்கிருந்து கொஞ்ச தொலைவு சென்றதும் பும்லா பாஸ் செல்லும் பாதையிலிருந்து விலகி ஸ்கார்பியோ இடப்புறமாக சென்றது. ஓட்டுநர் அடுத்ததாக மாதுரி லேக்குக்குப் போகிறோம் என்றார். அங்கிருந்து இறக்கத்தை நோக்கி வாகனம் பயணித்தது. பி.டி த்சோ ஏரியைக் காட்டிலும் மாதுரி ஏரி உயரம் குறைவான இடத்தில் அமையப்பெற்றிருக்கிறது. ‘சங்கேஸ்டர் த்சோ ஏரி’தான் மாதுரி ஏரி என்று மக்களால் விளிக்கப்படுகிறது. 1997 ல் வெளியான ‘கொய்லா’ திரைப்படத்தில் ஷாரூக்கானுடன் மாதுரி தீக்‌ஷித் இந்த ஏரியில் நடனமாடியிருப்பதாலேயே இந்த ஏரிக்கு மாதுரியின் பெயரை சூட்டி விட்டார்கள். திரைப்படங்கள் கூட்டு மனநிலையில் உண்டாக்கும் தாக்கம் அளப்பரியது. புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல்ஹாசனும் ரேகாவும் தற்கொலை செய்து கொள்வதற்காக குதித்த அதிரப்பள்ளி அருவி இன்றளவிலும் பலரால் ‘புன்னகை மன்னன் அருவி’ என்றே விளிக்கப்படுகிறதே அது போலதான்.        

சங்கேஸ்டர் ஏரியில் பனிப்பொழிவு இல்லை. ஏரியின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த மரப்பாலங்களில் எல்லாம் பௌத்த பிரார்த்தனைக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. உயர்ந்தோங்கியிருக்கும் மலைக்குக் கீழே விரிந்திருக்கும் ஏரிக்குள் மரங்கள் பட்டுப்போய் குச்சிக் குச்சியாக நின்றிருந்தன. சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் மாவநத்தம் என்கிற இடத்தில் உள்ள குட்டையை அது நினைவுறுத்தியது. அக்குட்டையிலும் மரங்கள் இது போல பட்டுப் போய்க் கிடக்கும். இது போன்று குச்சியாக இல்லாமல் நாட்டிய பாவனைகளைப் போல நளினத்தோடு நிற்பதால் அது அழகாகத் தெரியும். சங்கேஸ்டர் ஏரியைச் சுற்றித் திரண்டு நின்ற மலைகளில் பசுமை மங்கிக் கிடந்ததால் ஈர்க்கும் எழிலற்றுக் காட்சியளித்தது. கலங்கமற்ற தூய்மையான நீரில் கால் நனைக்க விரும்பினாலும் ஷூ அணிந்திருந்ததால் இயலவில்லை. பும்லா பாஸ்தான் இலக்காக இருந்த நிலையில் எனக்கு இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இருக்கவில்லை. அரை மணி நேரத்தில் சங்கேஸ்டர் ஏரியிலிருந்து வந்த வழியிலேயே திரும்பி பும்லா பாஸை நோக்கி விரைந்தோம். 

 உலவித் திரிவோம்...

- கி.ச.திலீபன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow