பாரீஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகள் நாளை (ஆகஸ்ட் 11ம் தேதி) நிறைவுபெற உள்ளன.
நமது இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை எந்த தங்கத்தையும் அறுவடை செய்யாமல் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. அதாவது இந்திய வீரர்கள் 5 வெண்கலகம், 1 வெள்ளி என 6 பதங்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஒலிம்பிக்கில் முதன்முறையாக துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும் தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார்.இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை வென்று இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. இதேபோல் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிப்பவர்களுக்கு தங்க பதக்கமும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்படுகின்றன.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்கும் பெரும் கனவு போன்றதாகும். விளையாட்டு வீரர்கள் உலகின் எந்த ஒரு போட்டி தொடரில் சாதித்தாலும் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வென்றால் அதனை ஒரு சாதனையாக கருதுவார்கள். அப்படி தாங்கள் பெரும் பதக்கத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
இப்படி நீண்ட காலம் தரம் குறையாமல் இருக்கும் வகையில் ஒலிம்பிக் பதக்கங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிலையில், 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' தொடரில் ஒலிம்பிக் தொடரில் வழங்கப்படும் பதக்கங்கள் விரைவில் துருபிடித்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடப்பு ஒலிம்பிக் தொடரில் அமெரிக்காவை சேர்ந்த நிஜா ஹஸ்டன் (Nyjah Huston) என்ற வீரர் ஆண்கள் ஸ்கேட்டிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் பரபரப்பான பதிவு வெளியிட்ட அவர், ''ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றபோது, தொடக்கத்தில் அந்த பதக்கம் பளபளப்புடன் இருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்த ஒரு வாரத்துக்குள் பதக்கம் வெளுத்து விட்டது. பதக்கத்தின் முன்பகுதி மிகவும் கரடுமுரடாக உள்ளது. இது பதக்க வடிவமைப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது'' என்று கூறினார்.
மேலும் தான் பெற்ற வெண்கல பதக்கம் துருபிடித்து வெளுத்து போன புகைப்படத்தையும் அமெரிக்க வீரர் நிஜா ஹஸ்டன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ''உலகின் பாரம்பரியமான, மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் பதக்கத்தை கூட தரமாக வடிவமைக்க முடியவில்லையா?'' என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.