தமிழ்நாடு

கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஆளுநர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள், மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஆளுநர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி
ஆளுநரின் நிகழ்ச்சியில் கருப்பு சட்டை அணிந்து சென்ற மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

கோவையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. யுபிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தமிழக மாணவர்களுடன், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். அவர்களை காவல்துறையினர் நிகழ்ச்சி அரங்கில் அனுமதிக்கவில்லை. கருப்பு சட்டையை கழற்றி விட்டு வந்தால் உள்ளே செல்லலாம் என்று அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மூன்று ஊடக ஒளிப்பதிவாளர்கள், கருப்பு சட்டை அணிந்து நிகழ்ச்சிக்கு சென்றனர். அவர்களை தடுத்த காவல்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தியை ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருந்ததால், அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனல், கருப்பு சட்டை அணிந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கருப்பு துப்பட்டா அணிந்த மாணவிகளும் உள்ளே காவல்துறை அனுமதிக்கவில்லை.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம், சேலம் பலகலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த தடைக்கு இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட குழு கண்டனம் தெரிவித்தது.

தொடர்ந்து அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுவாக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் கருப்பு சட்டை தடை விதித்த அறிவிப்பை திரும்ப பெற்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என்று பெரியார் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.