சென்னை: அலெக்ஸ் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் 'தோழர் சேகுவேரா'. பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'தோழர் சேகுவேரா' திரைப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சத்யராஜ் மற்றும் படக்குழுவினர் மட்டுமின்றி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இசை வெளியிட்டு விழாவில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், 'தோழர் சேகுவேரா' படத்தை இயக்கிய அலெக்ஸுக்கும், நடிகர் சத்யராஜ்க்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 'தோழர் சேகுவேரா' படத்தில் நீங்கள் நடிக்க முடியுமா? என்று முதலில் இயக்குநர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், ''நான் நடித்தால் இந்த படம் வெளிவராது. உங்களுக்குதான் பிரச்சனை'' என்று கூறினேன். அதன்பிறகே நடிகர் சத்யராஜிடம் சென்றார்கள்'' என்று கூறினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், ''என்னை எல்லோரும் புரட்சித் தமிழன் என்று அழைக்கிறார்கள். நான் புரட்சித் தமிழன் அல்ல; சாதாரண தமிழன்தான். இப்போது புரட்சித் தமிழன் பட்டம், புரட்சித் தமிழர் என்ற பெயரில் வேறு ஒருவருக்கு போய் விட்டது'' என்று தெரிவித்தார். மதுரையில் கடந்த ஆண்டு நடந்த அதிமுகவின் 'வீர வரலாற்று பொன்விழா’ மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு `புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது. இதை வைத்துதான் சத்யராஜ், எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் வேறு ஒருவர் என மறைமுக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தில் நடித்த கூல் சுரேஷ், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ''நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். தற்போது கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். கமலுக்கு பிறகு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்பதே இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது.
நான் விஜய் டிவியில் முக்கியமான பொறுப்பில் உள்ள ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை திருமாவளவன் தொகுத்து வழங்கினால் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவரும் திருமாவளவன் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். திருமாவளவன் சாரிடம் நீதி இருக்கும். நேர்மை இருக்கும். உண்மை இருக்கும். யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு நேர்மையுடன் உடனடியாக திருமாவளவன் தண்டனை கொடுப்பார்.
திருமாவளவன் சார், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் ஒட்டுமொத்த இந்தியாவும், ஏன் சட்டத்தை எழுதிய அம்பேத்கரே, தனது மாணவன் உலகமே கவனிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்று எழுந்து நின்று கைத்தட்டுவார். கமல் சாருடன் இதை கோர்த்து பேசி விடாதீர்கள். அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. கமல் சார் மிகவும் நல்லவர்'' என்று கூல் சுரேஷ் கூறியுள்ளார்.