Bum La Pass To Tawang : தீரா உலா 4 - விடைகொடு தவாங்!

Bum La Pass To Tawang : தீரா உலா 4(Theera Ulaa) இந்தப் பயணத்தைத் திட்டமிட்டபோது பெரும் சவாலாக முன் நின்றது பணம்தான்.

Aug 25, 2024 - 13:42
Aug 26, 2024 - 14:27
 0
Bum La Pass To Tawang : தீரா உலா 4 - விடைகொடு தவாங்!
Theeraa Ulaa 4 Of Thleepan Travel Between Bum La Pass To Tawang

Theera Ulaa 4 Travel Bum La Pass To Tawang

இந்தப் பயணத்தைத் திட்டமிட்டபோது பெரும் சவாலாக முன் நின்றது பணம்தான். நான் ஒரு பத்திரிகையாளன் என்பதால், ஓர் ஊருக்குச் சென்றால் அங்கே சுற்றித் திரிவது போக மீதமுள்ள நேரத்தில்  ஃப்ரீலான்சராக கட்டுரைகள் எழுதி சம்பாதிக்கும் திட்டத்தோடுதான் இப்பயணத்தையே தொடங்கினேன். பும்லா பாஸ் பயணத்தை முடித்து விட்டு வந்த பிறகு இரண்டு நாள்கள் கட்டுரை எழுதும் பணியில் ஈடுபட்டேன். தவாங்கில் நிலவிய கடுங்குளிரின் விளைவே கைகள் விரைத்துப் போவதால் தட்டச்சு செய்ய மிகவும் கடினமாக இருந்தது. நான்கு வரிகளுக்கு ஒரு முறை கைகளைத் தேய்த்தும், உதறியும் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக சரளமாக எழுத முடியவில்லை.

வெப்ப மண்டலப் பகுதியில் வளர்ந்த என்னால் கடுங்குளிரை பரவசத்தோடு அணுகத் தெரிந்திருந்ததே தவிர அதனுடன் இயல்பாக உறவாட இயலவில்லை. அதிகப்படியான நேரத்தை கனமான போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தபடியே கழித்தேன். விடுதியில் இருந்த உணவகத்திலேயே சாப்பிட்டேன். மிகக் குறைவான விருந்தினர்களே விடுதியில் தங்கியிருந்தனர். ஆகையால், அந்த விடுதியில் பெரும் நிசப்தம் நிலவியது. ஆர்ப்பரிப்புகள் அற்ற அமைதியான சூழல் மலைப்பிரதேசங்களுக்கே உரித்தானது. விடுதியின் முகப்பில் இருந்து பின்புறத்தில் பேருருவாய் எழுந்திருக்கும் ஷக்யமுனி புத்தரைக் காண முடிந்தது. சில வேளைகளில் பனி முற்றிலும் புத்தர் சிலையை மூடி விடும். இரவானதும் ஜெர்க்கினை அணிந்து கொண்டு நகருலா சென்று வருவேன். இப்படியாக காலம் நகர்வது சற்று அலுப்பூட்டக்கூடியதாக இருந்தது. செயலின்மைக்குள் சென்று விட்டதைப் போன்ற உணர்வு மேலெழுந்ததுமே தவாங்கிலிருந்து விரைவில் கிளம்ப வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருந்தேன். என்னைக் கூட்டிச் செல்வதற்காகவே அனுப்பப்பட்டவனைப் போல அப்போது என் அறைக்கு வந்தான் ஆகாஷ்.

என்னுடன் பும்லா பாஸுக்கு வந்த ஆகாஷ் இல்லை. இவன் பெங்களூருவைச் சேர்ந்த பைக்கர் ஆகாஷ். கருப்பு நிறத்திலான லெதர் ஜாக்கெட், பேண்ட் மற்றும் கையுறை அணிந்து ஹெல்மெட்டை கையில் வைத்தபடி அவன் எனது அறைக்குள் வந்தான். பைக்கர்களுக்கான மிடுக்கான அத்தோற்றத்தில் வந்தாலும் மழலைத்தனமான சிரிப்பு அவனிடமிருந்து வெளிப்பட்டது. “ஹாய்... நீங்க தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கிறீங்கன்னு ரிசப்ஷன்ல சொன்னாங்க... நான் பெங்களூர்தான்” என்றான். அவனை வரவேற்று சில வார்த்தைகள் பேசினேன். அவன் இருபத்தைந்து நாள்கள் பயணத்தைத் திட்டமிட்டு பெங்களூருவில் இருந்து கிளம்பியிருக்கிறான். தவாங் வந்ததன் நோக்கமே பும்லா பாஸ் செல்வதற்காகத்தான். அடுத்த நாள் அவன் தனது ராயல் என்ஃபீல்டிலேயே பும்லா பாஸ் செல்லவிருப்பதாகச் சொன்னான். எனது பும்லா பாஸ் பயண அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்தான். எனக்குப் பக்கத்து அறை அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேரில் ஒரு மனிதனுடன் தமிழில் உரையாடியது ஓர் உன்னதத் தருணமாக அமைந்தது.

இச்சந்திப்புக்குப் பிறகு அடுத்த நாள் மாலை தவாங்கின் கடைத்தெருவில் அவனைப் பார்த்தேன். பும்லா பாஸ் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருந்தான். சற்றே வதங்கிப் போய் வந்திருந்தான். தவாங்கிலிருந்து திரும்புகையில் பனிப்பொழிவு மிகுந்து விட்டதால் பைக் பயணம் மிகக்கடினமாக இருந்தது என்றான். அந்த முரட்டுப்பாதையில் பயணித்ததில் அவனது பைக் பழுதாகி விட்டது. நானும் அவனுடன் சென்று பழுது நீக்கும் கடையைத் தேடியடைந்து, சரி செய்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம். மறுநாள் அவன் தவாங்கிலிருந்து கிளம்புவதாகச் சொன்னான். சிக்கிம் மாநிலம் கேங்டாக் அல்லது இன்னொரு நகரம் (நினைவில் இல்லை) இரண்டில் எங்கு செல்வதென இன்னும் தீர்மானிக்கவில்லை என்றான். எப்படியாயினும் அவன் தேஸ்பூரை கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் நான் தேஸ்பூர் வரை அவனுடன் இணைந்து கொள்வதாகச் சொன்னேன். தவாங் மலைப்பாதையில் சுமோவிலும், பேருந்திலும் பயணித்து விட்டேன் என்பதால் பைக்கில் பயணிக்கும் அனுபவமும் தேவையெனப்பட்டது.

மறுநாள் காலை எங்கள் இருவரது பேக் பேக்குகளையும் ட்ராவல் ஏஜென்சி மூலம் தேஸ்பூருக்கு அனுப்பி விட்டு, ஷோல்டர் பேக்கில் தேஸ்பூர் வரைக்கும் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ஆகாஷ் தவாங்கிலேயே பெட்ரோல் நிரப்பிக் கொண்டான். நாங்கள் தவாங்கில் இருந்து கிளம்பியபோது மென் தூறலாய் மழை பெய்தது. பும்லாபாஸ் பயணத்தை மேற்கொண்டு விட்ட நிறைவுடனும், 8 நாள்கள் தவாங்கில் வாழ்ந்த நிறைவுடனும் அந்நகருக்கு விடை கொடுத்தேன். ஷக்யமுனி புத்தரை வெண்முகில் தழுவிச்சென்ற காட்சியும், அந்த விடுதி நிர்வாகியான மோன்பா பெண்ணின் வதனமும் மறக்க முடியாதது.

ஆகாஷ் இன்ஸ்டா 360 கேமிராவை பைக் ஹேண்டில்பாரில் பொருத்தினான். இந்த மாடல் அப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள நண்பர் அவனுக்கு அனுப்பினார் எனவும் இதன் விலை அறுபதாயிரம் என்றும் சொன்னான். அவனது ரைடிங் ஜாக்கெட், பேண்ட் தொடங்கி தொலைதூரப் பயணத்துக்கென அவன் பைக்கில் கூடுதலாகப் பொருத்தியிருக்கும் உபகரணங்கள் வரை ஒவ்வொன்றின் விலையையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். எனது யூகங்களுக்கு அப்பாற்பட்டு அவற்றின் விலை இருந்தது. பைக்கர்களின் வாழ்வியல் என்னைப் பொன்ற தனிப்பயணிக்கு முழுவதுமாக அப்பாற்பட்டது என அப்போது அழுத்தமாகப் புரிந்தது.

சில தொலைவு சென்றதற்குப் பிறகு மழை வேகமெடுத்தது. ஏற்ற இறக்கங்களும், வளைவுகளும் மிகுந்த அந்தப் பாதையில், ஈரமான சாலையில் பைக் ஓட்டிச் செல்வது சவால் மிகுந்ததுதான். எங்கு வேண்டுமானாலும் வழுக்கும் அபாயத்தை உணர்ந்தே செல்ல வேண்டியிருந்தது. “தனியாக வந்திருந்தால் வேகமாகச் சென்றிருப்பேன். நீ உடன் வருவதாலேயே அதிக கவனத்துடன் செல்ல வேண்டியிருக்கிறது” என்று ஆகாஷ் சொன்னான். உண்மைதான். எப்படிப்பட்ட  சவாலையும் தனியாக நாம் எதிர்கொள்ளலாம். என்னவாயினும் அது நம்மை மட்டுமே சாரும். உடன் வருகிறவரை அதற்குள் தள்ளி விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வு ஆகாஷின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. தோராயமாக 40 கிலோமீட்டர் கடந்திருப்போம். சாலை மிக மோசமான நிலையில் இருந்தது. மழையால் சேறாகிக் கிடந்தது. மிக மெதுவாகச் சென்றாலே வழுக்கி விடும் நிலையில்தான் பைக்கை ஓட்டிச் சென்றான் ஆகாஷ். ஏற்றங்களில் பைக்கை பெரும் விசையோடு செலுத்த முடியாததால் நான் இறங்கிக் கொள்ள அவன் காலால் உந்தி உந்தி மெதுவாகச் செலுத்திக் கொண்டு போனான். ஒரு கட்டத்தில் இது எங்களை பெரும் சோர்வுக்குள் தள்ளியது. நான் உடன் வராவிட்டால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது என்று நினைக்கையில் எனக்கு குற்ற உணர்ச்சி மோலோங்கியது.

வழியில் ஒரு சாலையோர உணவகத்தில் நிறுத்தி சாப்பிடச் சென்றோம். எனக்கு முன்பே சாப்பிட்டு முடித்த ஆகாஷ் உணவகத்துக்கு வெளியே யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். அவர் பொலிரோ பிக் அப் ஓட்டுநர். ஆகாஷ் தவாங்குக்கு வருகிற போதே இவரைச் சந்தித்திருக்கிறான். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததால் எனக்குப் புரியவில்லை. பிறகு ஆகாஷ் என்னிடம் சொன்னான். “சீலா பாஸ் தாண்டுகிற வரையிலும் சாலை இது போன்று கடும் மோசமான நிலையில் இருப்பதால் பைக்கில் இருவர் செல்வது கடினம். ஆகவே, இவர் உங்களை சீலா பாஸ் தாண்டுகிற வரையில் தனது பொலிரோவில் கூட்டிச் செல்வதாகச் சொல்கிறார்” என்றான். நானும் அதையே எதிர்பார்த்திருந்தேன் என்பதால் பொலிரோவில் கிளம்பினேன். அதன் ஓட்டுநர் என்னிடம் இந்தியில் பேச தலைப்பட்ட போது எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்திலேயே பேசினேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் எங்களுக்குள் உரையாடல் நிகழாமலேயே போனது.

அந்தச் சூழலை இலகுவாக்குவதைப் போல ஸ்டீரியோ சிஸ்டத்தில் இருந்து இந்திப் பாடல்கள் ப்ளே ஆகிக்கொண்டிருந்தது. அவை மெல்லிசைப் பாடல்கள். 80களில் வெளியான திரைப்படப் பாடல்கள் என்பது எனது கணிப்பு. சீலா பாஸை நெருங்கும் முன்பே பனிப்பொழிய ஆரம்பித்து விட்டது. சோன்பப்டி துகளைப் போல் பனி உதிர்ந்து கொண்டிருக்க, பின்னணியில் ஒலிக்கும் இந்திப்பாடல் அந்தச் சூழலையே ரம்மியமாக்கியது. சீலா பாஸைத் தாண்டிய பிறகு பொலிரோ ஓட்டுநர் என்னை தேநீர் விடுதி ஒன்றில் இறக்கி விட்டுச் சென்று விட்டார். வீடுதான் அது. வீட்டின் ஒரு பகுதியை தேநீர் விடுதியாக்கியிருந்தனர். நான் வாசலிலேயே நின்று ஆகாஷ் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஆகாஷை நான் தடுக்கவில்லையெனில் அவன் இந்த இடத்தைத் தாண்டிச் செல்லக்கூடும் என்பதால் வழி பார்த்தே நின்றிருந்தேன். நினைத்ததைப் போலவே ஆகாஷ் என்னைக் கடந்து சென்று விட்டான். அவன் சென்ற வேகத்தில் எனது அழைப்புக் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. அவனது செல்போனுக்கு அழைக்கலாம் என்றல எனது போனில் சிக்னல் இல்லை. இப்படியும் ஒரு பிரச்னை. அந்தக் கடையில் உள்ளவரிடம் போன் வாங்கி அழைத்து அவனை திரும்ப வர சொன்னேன்.

அந்த வீடே கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. கடையை ஒட்டியிருந்த அறையில் பலூன்களைக் கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்தனர். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் புத்தாடை அணிந்த படி நின்றிருந்தான். அவனுக்குதான் பிறந்த நாள். அவன் இக்கடை உரிமையாளரின் மகனாக இருக்கலாம். ஆகாஷ் அந்தக் கடையிலே மூன்று டைரி மில்க் சாக்லேட்கள் வாங்கினான். அவனும் நானும் உள்ளே சென்று அந்தக் கொண்டாட்டத்தில் அவர்களுள் ஒருவராகக் கலந்தோம். கொஞ்ச நேரத்தில் அச்சிறுவன் கேக் வெட்டிய பிறகு ஆகாஷ் அவனுக்கு டைரி மில்க் சாக்லேட்டைக் கொடுத்து வாழ்த்தினான். மேலும் அங்கிருந்த இரு சிறுவர்களுக்கும் சாக்லேட் கொடுத்தான். ஆகாஷ் எந்தச் சூழலிலும் எல்லா விதமான மனிதர்களோடும் இயல்பாகக் கலந்து விடுகிறான். நான் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டவன். அவனளவுக்கு என்னால் மிக எளிதாகக் கலந்து விட முடியாது. ஆளுக்கொரு தேநீர் அருந்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

சிறிது தொலைவு சென்ற பிறகு அடுத்ததொரு சவாலுக்கு நாங்கள் தயாராக வேண்டியிருந்து. பனி மூட்டம் சாலையினை முற்றிலுமாக மூடியிருந்தது. எதிரில் வரும் வாகனங்கள் எதுவும் தெரியாத நிலை. பனிமூட்டத்தை கிழித்துக்கொண்டு வரும் விளக்கொளியினை வைத்து மட்டுமே எதிரில் வாகனம் வருவதை தோராயமாக கணிக்க முடியும். ஆகாஷ் அவனது வண்டியில் பொருத்தியிருந்த ப்ளிங்க் லைட்டை ஒளிர விட்டான். எதிரில் வருகிற வாகன ஓட்டிக்கு இந்த சிமிட்டும் ஒலி நல்ல எச்சரிக்கையாக இருக்கும். பத்து கிலோ மீட்டரைக் கடந்தும் பனிமூட்டம் விலகவே இல்லை. ஒரு கட்டத்தில் பைக் ஓட்ட முடியாமல் எதிர்பட்ட டீக்கடையில் ஓரம் கட்டி விட்டான் ஆகாஷ். ஆளுக்கொரு ப்ளாக் டீ சொன்னோம். பனி விலகுவதாய் இல்லை.

அன்றைய தினமே தேஸ்பூரை அடந்து விட வேண்டும் என்பது ஆகாஷின் எண்ணமாக இருந்தது. அவனுக்கு பயணம் செய்வதற்கான நாள்கள் மிகக்குறைவாகவே இருந்தது. ஆகவே, ஒரு நாளைக்கூட அவன் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. அன்றைய தினமே தேஸ்பூரை அடைவது சாத்தியமற்றது. ஏனெனில் தேஸ்பூர் இருநூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தது. நாங்கள் நின்ற இடத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்த டிராங் எனும் குறுநகரில் தங்கி விட்டு அடுத்த நாள் கிளம்புவது ஒன்றே நல்ல திட்டமாக இருக்க முடியும் என்று சொன்னேன். ஆகாஷும் அதனை ஏற்றுக் கொண்டான். பனி மூட்டம் விலகுவதற்காக அதற்கும் மேல் காத்திருக்க நேரமில்லை. ப்ளாக் டீ குடித்து முடித்ததும் ப்ளிங்க் லைட்டை ஒளிர விட்டுக் கிளம்பினோம்.

பயணக்களைப்பு உடலை அழுத்தியிருக்க, டிராங் நகரின் மையத்தில் உள்ள விடுதியில் தங்கி ஓய்வெடுத்தோம். இந்நகரில் பனிப்பொழிவில்லை, கிரகிக்கவியலாத குளிர் இல்லை. குன்னூர் அளவுக்கான குளிரே நிலவியது. நல்ல உறக்கத்துக்குப் பிறகு மறுநாள் காலை எழுந்ததும் டிராங் பௌத்த மடாலயத்துக்குச் செல்லலாம் என்று ஆகாஷை அழைத்தேன். தேஸ்பூர் செல்வது மட்டுமே அவனது முதன்மை நோக்கமாக இருந்ததால் பௌத்த மடாலயத்துக்குப் போவதில் அவனுக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. நான் முன்பே சொன்னது போல பைக்கர்களின் பயணம் என்பது சாலையில் மட்டுமே நிகழ்வது. எனது விருப்பத்துக்காக மட்டுமே அவன் திராங் மடாலயத்துக்கு என்னை அழைத்துச் சென்றான். வாயிலில் என்னை இறக்கி விட்டவன்  “நீ போய்ப் பார்த்துட்டு வா... நான் இங்கயே நிற்குறேன்” என்று என்னை அனுப்பி வைத்தான்.

உலவித்திரிவோம்....

- கி.ச.திலீபன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow