Adukkam Road Trip in Tamil Nadu : உங்க கண்களை ஒரு நிமிஷம் மூடி இதை கற்பனை செய்து பாருங்க. ஒரு உயரமான கட்டிடம்.. அதுல செங்குத்தான வளைவு வளைவான பாதை.. அதுல நீங்க ஏறிப்போகும்போது என்ன உணர்வு இருக்குமோ அதை விட பல மடங்கு த்ரில்லிங்கான ஒரு அனுபவத்தை கொடுக்கக்கூடியது இந்த பாதை. மலைகளின் அரசி என்றழைக்ககூடிய கொடைக்கானலுக்கு போக மொத்தம் மூன்று வழிகள் இருக்கு. அதில் முதலாவதாக திண்டுக்கல் - தேனி வழியாக செல்லும் பாதை. இது பிரதான பாதையாகும். பொதுவாகவே கொடைக்கானலுக்கு செல்லும் முக்கால்வாசி பேர் இந்த பாதையைதான் பயன்படுத்துவாங்க. இந்த பாதை இரு பக்கமும் வாகனங்கள் செல்லக்கூடிய அளவுக்கு அகலமானதாக இருக்கும். டூ வீலர் முதல் கனரக வாகனங்கள் வரை இந்த பாதையில் செல்ல முடியும். இதில் ஹேர்பின் பெண்டும் அதிகளவில் இருக்காது.
இரண்டாவது பழனி வழியாகக் கொடைக்கானலுக்கு(Kodaikanal) செல்லக்கூடிய பாதையாகும். இந்த பாதை கொஞ்சம் ஆபத்தானதுதான். ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லக்கூடியதாக இருந்தாலும், இதில் ஹேர்பின் பெண்டுகள் அதிகளவில் காணப்படும். இந்த பாதையில் கனரக வாகங்களால் வர முடியாது. மலைப்பாதைகளில் நன்றாக வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களால் மட்டும்தான் இந்த பாதை வழியாக பத்திரமாகக் கொடைக்கானலுக்கு செல்ல முடியும். இந்த பாதை பழனியில் தொடங்கி பெருமாள் கோயிலில் முடியும்.
மூன்றாவதுதான் அடுக்கம் பாதை(Adukkam Road). தேனி மாவட்டம் கும்பக்கரையில் தொடங்கும் இப்பாதை கும்பக்கரை வழியாக அடுக்கம் கிராமத்தை அடைகிறது. பின்பு அங்கிருந்து அப்படியே பெருமாள் கோயிலை இப்பாதை சென்றடையும். ஒற்றையடிப் பாதை போலக் காட்சியளிக்கும் இந்த பாதைதான் தமிழ்நாட்டிலேயே மிகவும் அழகான பாதை என அங்கு சென்று வந்த பல டிராவலர்கள் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டடத்தில் ஏறுவது போன்ற உயரமான செங்குத்தான இந்த பாதையில் பல S பெண்டுகள் இருக்கும். கனரக மற்றும் பெரிய அளவு வாகனங்களால் இந்த பாதையில் செல்ல முடியாது. ஒரு பக்கம் அடர்த்தியான மரங்கள் மற்றொரு பக்கம் மலை என பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியை தரும் இந்த பாதை, மழை நேரங்களில் மிகவும் ஆபத்தானவை.
மேலும் படிக்க: 'ராணுவ வீரர்களுக்கு சல்யூட்'.. 3ம் வகுப்பு 'குட்டி' பையன் நெகிழ்ச்சி கடிதம்
மழை நேரங்களில் இப்பாதையில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பொதுவாகவே 6 மணிக்கு மேல் இந்த பாதையில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகம் இருக்குமாம். இதைத்தவிர உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இன்னும் பல வனவிலங்குகளின் நடமாட்டமும் இருப்பதால் பொழுது சாய்ந்த பின்பு இந்த பாதையில் செல்வதை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் ஒரு சூப்பரான, சுவாரஸ்யமான, த்ரில் அனுபவம் பெற விரும்புபவர்கள் ஒரு முறையாவது காலை நேரத்தில் இந்த பாதை வழியாக கொடைக்கானலுக்கு சென்று பாருங்கள்.