Wayanad Landslide Rescue Operation in Kerala : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து படுபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கட்டடங்கள், அங்கு இருந்த பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர்.
மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 385 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம், காவல் துறையினர் என 1,500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சரியாக உணவு உட்கொள்ளாமல், தூங்காமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 30 மணி நேரத்தில் 26 டன் எடையுள்ள இரும்பு பாலத்தை அமைத்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். இந்நிலையில், கேரளாவை சேர்ந்த 3வது படிக்கும் ஒரு சிறுவன் நிலச்சரிவு மீட்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை பாராட்டி கடிதம் எழுதியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் பெருமண்ணா பகுதியை சேர்ந்த ராயன் என்னும் அந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள ஏஎம்எல்பி பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து மலையாளத்தில் கடிதம் எழுதியுள்ள சிறுவன் ராயன், ''டியர் இந்தியன் ஆர்மி.. நான் ராயன்.. எனது அன்புக்குரிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி பேரழிவை சந்தித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை நீங்கள் (ராணுவ வீரர்கள்) மீட்டு வருவதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.
நீங்கள் பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்கி பாலம் கட்டிய வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். நானும் ஒருநாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என்னுடைய நாட்டை காப்பேன். உங்களுக்கு எனது மிகப்பெரிய சல்யூட். இப்படிக்கு மாஸ்டர் ராயன்'' என்று கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளான். இந்த சிறுவனின் பாராட்டு ராணுவ வீரர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறுவனின் கடிதத்தை இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளை பிரிவு (Southern Command indian army) 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், ''டியர் மாஸ்டர் ராயன்.. உங்களுடைய இதயப்பூர்வமான வார்த்தை எங்களின் ஆழ்மனதை தொட்டு விட்டது. இந்த கடினமான நேரத்தில் நம்பிக்கையின் விளக்காக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். உங்களை போன்ற ஹரோக்களின் உத்வேகம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. நீங்கள் ராணுவ சீருடை அணிந்து, எங்களுடன் சேர்ந்து நிற்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். தைரியம் மற்றும் உத்வேகம் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி இளம் போர் வீரனே'' என்று இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளை பிரிவு 'எக்ஸ்' தளத்தில் கூறியுள்ளது.