Aadi Pournami : ஆடி பௌர்ணமி.. அழகர்கோவிலில் திறக்கப்பட்ட பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கதவுகள்.. சிலிர்த்த பக்தர்கள்

Aadi Pournami 2024 at Alagar Kovil in Madurai : ஆடி பௌர்ணமியையொட்டி அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

Jul 22, 2024 - 10:17
Jul 22, 2024 - 11:56
 0
Aadi Pournami : ஆடி பௌர்ணமி.. அழகர்கோவிலில் திறக்கப்பட்ட பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கதவுகள்.. சிலிர்த்த பக்தர்கள்
Madurai Alagar Temple

Aadi Pournami 2024 at Alagar Kovil in Madurai : மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமியையொட்டி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது.

அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா(Aadi Festival 2024) நடைபெற்று வருகின்றது, இதில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் ஆடி பௌர்ணமி(Aadi Pournami 2024) நாளான நேற்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை கோவிந்தா முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்தனர். 

இதனையடுத்து அழகர்கோவில் காவல் தெய்வமான விளங்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் படி பூஜை நேற்று இரவு நடைபெற்றது.  பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலில் உள்ள பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஜோதி ஏற்றபட்டதை தொடர்ந்து, பக்தர்களின் தரிசனத்திற்காக திருக்கோவில் கதவுகள் சிறிது நிமிடங்கள் மட்டும்  திறக்கப்பட்டது.
அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள், உடல் சிலிர்க்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருமாலிருஞ்சோலை, அழகர் மலை, சோலைமலை என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் அழகர் கோவிலின் மூலவராய் அருள்பாலிக்கிறார் பரமஸ்வாமி. அங்கே  உற்சவராக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள் பாலிக்கிறார்  கள்ளழகர். இந்த அழகரையும், மலையையும் காவல் காத்து வருகிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. மிகப்பெரிய அரிவாள் உள்ளது. அநியாயங்கள் செய்பவர்களை தண்டிக்காமல் விடமாட்டார்  என்பதால் இந்த பகுதி மக்களுக்கு கருப்பண்ணசாமி  மீது பயமும் பக்தியும் அதிகம்.

பதினெட்டாம்படியான் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் கருப்பண்ணசாமியை வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை. 
தினசரியும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும்,கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலையில் கருப்பசாமியின் முன்பு உள்ள சாவியை பெற்று கோவில் கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது .


சித்திரை திருவிழாவிற்கு(Chithirai Thiruvizha) வைகை ஆற்றில் இறங்குவதற்காக தங்கப்பல்லாக்கில் மதுரைக்கு புறப்படும்போது அழகர் அணிந்துள்ள தங்க நகைகள் ஆபரணங்கள் எண்ணப்பட்டு அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி முன்பு படித்து காட்டப்படும். அதே போல மதுரையில் இருந்து கோவிலுக்கு திரும்பி வந்த பின்னரும் நகைகள் சரி பார்க்கப்பட்டு கருப்பண்ணசாமி முன்பு பட்டியல் வாசிக்கப்பட்டே கள்ளழகர் கோவிலுக்குள் நுழைவார்.

கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் . கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் பல வழக்குகள் அவர் முன்பு  தீர்க்கப்பட்டு வருகின்றன. 

கருப்பண்ணசாமி எப்படி காவல் தெய்வமாக இங்கே வந்தார் என்பதே ஒரு சுவாரஸ்யமான கதை. கேரளாவை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் பாண்டிய நாட்டுக்கு வந்தான். திவ்விய தேசமான திருமாலிருஞ்சோலைக்கு வந்திருந்த போது அங்கே எழுந்தருளியிருக்கும் கள்ளழகரின் அழகைக் கண்டு மயங்கினான். அழகரை கடத்திக்கொண்டு போய் தனது நாட்டில் வைத்துக்கொள்ள திட்டமிட்ட அந்த அரசன் நாடு திரும்பிய உடன் மந்திர,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 மந்திரவாதிகளை தேர்வு செய்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பினான். 

அழகரை தூக்கி வரும்படி கட்டளையிட்டான். பதினெட்டு பேரும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள். மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி பதினெட்டு பேருக்கு முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே மந்திரவாதிகள் அழகர்மலைக்கு வந்தனர். அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம், கருப்பண்ணசாமி அப்படியே அழகரின் அழகில் மயங்கி மெய் மறந்து நின்றது .

18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து, தங்க ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணத்தில் கருவறை நோக்கி சென்றனர். இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட பக்தர் ஒருவர், ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல, மக்கள் அனைவரும் திரண்டு வந்தனர். மந்திரவாதிகள் 18 பேரையும் கொன்று, பெரிய கோபுரத்தின் முன்பாக பதினெட்டு படிகள் செய்து, படிக்கு ஒருவராக  புதைத்தனர்.

மந்திரவாதிகளுக்கு காவலாக வந்து மயங்கி நின்ற கருப்பசாமிக்கு காட்சி தந்த கள்ளழகர் அழகர் மலையையும், தன்னையும் காவல் காக்குமாறு உத்தரவிட்டார்.  இதனையேற்று கருப்பசாமி அழகர் மலையிலேயே தங்கி இன்று வரை காவல் காத்து வருகிறார் என்பது நம்பிக்கை. 18 பேருடன் வந்த  அவர் பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தருகிறார். 

ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி, அழகருக்கு அர்த்த ஜாம பூஜையின் போது செய்யப்படும் பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்டினாராம் அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது.அழகர் கோவிலில் காவல் தெய்வமாக நின்ற கருப்பசாமி  நாளடைவில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார். கருப்பண்ணசாமிக்கிட்ட வேண்டிக்கிட்டா கை மேல் பலன் நிச்சயம் கிடைக்கும். 

இதனிடையே நேற்றைய தினம் கதவுகள் திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கருப்பண்ணசாமியை தரிசனம் செய்ய ண்கள், குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்தது பக்தர்களை பெரிதும் சிரமத்திற்கு ஆளாக்கியது. மேலும், காவல்துறை சார்பில் பக்தர்களை ஒழங்குப்படுத்துவதற்காக வைக்கப்படும் இரும்பு தடுப்புகளில், முள்வேலி அமைத்து பக்தர்களை தடுத்ததால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. 

அதேபோல் திருக்கோவில், முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும், திருக்கோவில் பணியாளர்களும் தாங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதித்தது, பக்தர்களை பெரிதும் முகம் சுழிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில், இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு உரிய ஆலோசனை வழங்கி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow