Special Bus : ஆடி அமாவாசை, வார இறுதி நாட்கள்... எந்தெந்த ரூட்டுக்கு சிறப்பு பேருந்துகள்!

Aadi Amavasai 2024 Special Buses in Tamil Nadu : ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

Jul 31, 2024 - 19:46
Aug 1, 2024 - 10:21
 0
Special Bus : ஆடி அமாவாசை, வார இறுதி நாட்கள்... எந்தெந்த ரூட்டுக்கு சிறப்பு பேருந்துகள்!
ஆடி அமாவாசைக்கு சிறப்புப் பேருந்துகள்

Aadi Amavasai 2024 Special Buses in  Tamil Nadu : ஆகஸ்ட் 4ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை தினம் என்பதால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதோடு வார இறுதி நாட்களை முன்னிட்டும் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதியான வெள்ளிக்கிழமை முதல் 4ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 
சென்னை மட்டுமின்றி பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

வரும் 2ம் தேதியான வெள்ளிக்கிழமை 295 பேருந்துகளும், ஆகஸ்ட் 3ம் தேதி 325 பேருந்துகளும் இயக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. ஆகஸ்ட் 2ம் தேதி 60 பேருந்துகளும் 3ம் தேதி சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லவும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதன்படி ஆகஸ்ட் 4ம் தேதியான ஞாயிறு அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9,451 பயணிகளும் சனிக்கிழமை 3,570 பயணிகளும், ஞாயிறு அன்று 8,257 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - ஆடிப்பெருக்கு.. நீரோடும் காவிரியில் ஆடி 18

அதன்படி, www.tnstc.in அல்லது Mobile App மூலம் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow