பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - எத்தனை நாட்கள் நடக்கிறது? : முழு விவரம்

Engineering Colleges Single Window Counselling 2024 : பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

Jul 22, 2024 - 09:38
Jul 22, 2024 - 11:42
 0
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - எத்தனை நாட்கள் நடக்கிறது? : முழு விவரம்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

Engineering Colleges Single Window Counselling 2024 : தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர்  விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து  9 ஆயிரத்து 645 பேர் மட்டுமே பதிவு  கட்டணம் செலுத்தியிருந்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, 1,99,868 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங் நடப்பு கல்வியாண்டில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 376 இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் திங்கட்கிழமை தொடங்குகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான (7.5 சதவீத இடஒதுக்கீடு) கலந்தாய்வு 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெறும். அதை தொடர்ந்து சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடை பெறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும்.

விளையாட்டுப் பிரிவில் 2,112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள் பிரிவில் 1,223 பேரும், சிறப்புப் பிரிவுகளில் அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு பிரிவின்  கீழ் 386 பேரும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 29ஆம் தேதி தொடங்கி  செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மற்றும் அருந்ததியர் பிரிவில் ஏற்படும் காலி இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11ஆம் தேதிகளில் நடைபெறும். செப்டம்பர் 11 ஆம் தேதி மாணவர்  சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். இந்த கவுன்சிலிங்கில் 441 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow