மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை; இயல்பு நிலை முடங்கியது... ஆரஞ்சு அலெர்ட்!
IMD Issues Orange Alert in Mumbai : மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.

IMD Issues Orange Alert in Mumbai : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மராட்டியம், கேரளம், கர்நாடகம் மற்றும் கோவாவில் அதிகனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை கனமழை(Heavy Rain in Mumbai) புரட்டி எடுத்து வருகிறது. நேற்று காலை வரை சுமார் 100 மிமீ மழை பதிவாகியிருந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 130மிமீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுத்து எச்சரித்துள்ளது.
மும்பையின் முக்கிய புறநகர்ப் பகுதிகளான தாதர், ட்ரோம்பே, காட்கோபர், BKC உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் முக்கிய பகுதிகளான அந்தேரி, மலாட், தஹிசார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அவற்றை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது ஒரு பக்கமிருக்க, மறுபக்கம், காற்றின் வேகம் காரணமாக மரங்கள் முறிந்து சாலைகளில் விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மும்பை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 23 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், 10 இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போல், கனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் ஒரு உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் ஏக்னாத் ஷிண்டே, “மும்பையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(India Meteorological Department) தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு, தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அவசர காலத்தில் 100 என உதவி எண்ணுக்கு அழைத்து மக்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். மேலும், “மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரம் காலம் பார்க்காமல் செய்துகொடுக்க வேண்டும்” எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு பெய்த கனமழையில் மும்பை(Mumbai Heavy Rain) மாநகரம் திக்கித் திணறியது என்றே கூறலாம். அன்று முதல் இன்று வரை, தென்மேற்கு பருவ மழையினால் மும்பை படாத பாடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மழைக்கும் சாலையில் தேங்கும் தண்ணீராலும், வீடுகளில் வெள்ளம் புகுவதாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மழைக்காலம் வந்தாலே வாழ்வா? சாவா? என்ற அச்சுறுத்தும் நிலை ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






