சமூக நீதியை போதித்த ராமர்.. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி.. அமைச்சர் ரகுபதி புகழாரம்

Law Minister Raghupathy About Lord Rama : ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும்; இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமகாவியம்

Jul 22, 2024 - 11:02
Jul 22, 2024 - 12:15
 0
சமூக நீதியை போதித்த ராமர்.. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி.. அமைச்சர் ரகுபதி புகழாரம்
Social Justice Is Lord Rama Says Tamil Nadu Law Minister Raghupathy

Law Minister Raghupathy About Lord Rama: திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியே கடவுள் ராமர்தான் என்று தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கருக்கு முன்னரே சமூக நீதியைப் போதித்த ஒரே நாயகன் கடவுள் ராமர் என்றும் தமிழக அமைச்சர் ரகுபதி புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.இந்த நிலையில் திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர் என்று திமுக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும்; இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமகாவியம்- கம்பராமாயணம் என்பதை நாம் இங்கே மனதில் வைத்துக் கொண்டாக வேண்டும்.

எனவே, இது ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கும் பாதிப்பேருக்கு. அதில் உள்ள பல நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும். எனவே வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கின்ற போதுதான், இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கின்ற காரணத்தால்தான் ராமனை இன்றைய திராவிட மாடல் ஆட்சியினுடைய முன்னோடியாக நாங்கள் கருதுகிறோம்.


தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், டாக்டர் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கருணாநிதி முன்னால் இன்று நம்முடைய நம் தளபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னால் இந்த திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கக் கூடிய சமூக நீதியை, சமத்துவ சமூக நீதி இவற்றையெல்லாம் போதித்தவர்; எல்லோரும் சமம் என்று சொன்னவர் ஒரே நாயகன் ராமர். இதை யாரும் மறுக்க முடியாது. 

இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி. 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று யாருடைய தயவு இல்லாமல் மீண்டும் ஆட்சியை அமைக்கும். யாருடைய தயவையும் பெறும் சூழ்நிலையும் எங்களுக்கு வராது என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow