திமுக ஃபர்ஸ்ட் எண்ட்ரி... ஓடோடி சென்ற ஈ.பி.எஸ் - தொடங்கியது தேர்தல் யுத்தம்..

Edappadi Palaniswami X Post vs Udhayanidhi Stalin Speech : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அஇஅதிமுக தொடங்கி விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Jul 22, 2024 - 10:38
Jul 22, 2024 - 12:06
 0
திமுக ஃபர்ஸ்ட் எண்ட்ரி... ஓடோடி சென்ற ஈ.பி.எஸ் - தொடங்கியது தேர்தல் யுத்தம்..
உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவு

Edappadi Palaniswami X Post vs Udhayanidhi Stalin Speech : தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதை அடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞர் அணி தலைமையகமான அன்பகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) கலந்துகொண்டு திமுக இளைஞர் அணியின் 45ஆம் ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்கள் மனத்தை மாற்ற, மோடி அவர்கள் ஆறு முறை, ஏழு முறையென தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். எந்த முறையும் இல்லாத அளவிற்கு எப்படியாவது இரண்டு அல்லது மூன்று சீட்டுகளாவது வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் வந்தார்.

நான் அப்போதே சொன்னேன், 'நீங்கள் ஆறு முறை இல்லை, ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்கள் தலைவரையும் சமூக நீதியையும்தான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று சொன்னேன். நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், எப்படி அரசியல் களத்தில் மக்களைச் சந்திக்கிறோமோ, அந்தக் களம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல இன்றைக்கு இந்தச் சமூக வலைத்தளங்களும் மிக மிக முக்கியமாக இருக்கின்றன.

குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி(Bharatiya Janata Party) வெறும் பொய்களையே பரப்பி, பொய்களை மட்டுமே பேசி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். 2026-ஆம் ஆண்டு என்ன நடந்தாலும் சரி... எத்தனைக் கூட்டணிகள் வந்தாலும் சரி... மீண்டும் தமிழ்நாட்டை ஆளப்போவது நம்முடைய கழகத் தலைவர் அவர்கள்தான். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான், அது மட்டுமே நம் இளைஞர் அணியின் இலக்காக இருக்க வேண்டும்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக(Udhayanidhi Stalin as Deputy CM) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் வேளையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு அரசியல் அடித்தளத்தின் அடுத்தக்கட்டமாக பார்க்கப்படுகிறது. மேலும், இளைஞர் அணி மாநாடு திமுக அரசியல் நகர்விற்கு முன்னோட்டமாகவே அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

திமுக கூட்டணியில்(DMK Alliance) அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் தனது செல்வாக்கை தமிழகத்தில் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, “கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் நேரத்தில், எங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் அளிக்கவில்லை என, கட்சியினர் மத்தியில் பெரிய மனக்குறை உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் உதாசீனப்படுத்துவது போலத்தான் நடந்து கொள்கின்றனர்.

நாம் நம்மை முழுமையாக வலுப்படுத்திக் கொள்ளும்போது, இதெல்லாம் தானாகவே மறைந்து விடும். காங்கிரஸ் வலிமையாக இருந்தால் கவுரவம் கிடைக்கும் என்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நின்று வெற்றிபெற போவதாகவும், அதற்காக 19, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அனுப்பப்படும்” என்றும் தெரிவித்து இருந்தார்.

அதேபோல, இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைக்கு, திமுக அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் திமுக அரசை விமர்சித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்த பேச்சுகள் அதிகமாக உலாவ தொடங்கின. இரண்டு கட்சிகளும் பிரிந்ததற்கான காரணத்தை, ஒருவர் மேல் ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டின. ஆனாலும், இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகள் தான் அதிகம் அடிபட்டன. ஒருவேளை இந்த கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில்(TN Assembly Election 2024) இணைந்த செயல்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin Speech) பேசியதை அடுத்து, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அஇஅதிமுக தொடங்கி விட்டது” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow