ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா..பிரதமர் மோடி வாழ்த்து

olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

Aug 9, 2024 - 07:23
 0
ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா..பிரதமர் மோடி வாழ்த்து
neeraj chopra won silver medal

33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11) வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு வீரருக்கும் ஆறு முயற்சிகள் வழங்கப்பட்டன. அதன் படி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் அவருக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டது. எனினும் தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அடுத்தபடியாக இறங்கிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தனது முதல் முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டியதாக் சிவப்புக் கொடி காட்டப்பட்டார். ஆனால் இரண்டாவது முயற்சியில் ஒலிம்பிக்கில் யாரும் இதுவரை தொடாத 92.97மீ எறிந்து சாதனை படைத்தார். இதுவரை ஈட்டி எறிதலில் அதிகபட்ச தூரம் 90.57 மீட்டர் ஆகும். தற்போது அதனை அர்ஷத் முறியடித்துள்ளார்.

ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கென்யாவின் ஜூலியஸ் யேகோ, செக் குடியரசின் யாகூப் வட்லெஜ்ச் என யாராலும் அர்ஷத் மற்றும் நீரஜ் சோப்ராவின் தூரத்தை நெருங்க இயலாத நிலையில், ஆறாவது சுற்றில் மீண்டும் 90 மீட்டருக்கு மேல் எறிந்தார் அர்ஷத்.இதன் மூலம் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இம்முறை நான்கு வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறது. ஆனால் நடப்பு தொடரில் ஒரு தங்கப் பதக்கத்தை கூட இந்தியா வாங்கவில்லை. இதனால் இந்தியாவின் கனவை நீரஜ் சோப்ரா தான் காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கமே கிடைத்தது.88.54 மீ வீசிய கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி  தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது,  “நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 
அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. 

வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது” என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow