தமிழ்ப்புதல்வன் திட்டம்.. கோவையில் தொடக்கி வைத்த முதல்வர்..மாணவர்கள் ரூ.1000 பெற என்ன நிபந்தனை

மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் தொடக்கி வைத்தார். மாணவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.

Aug 9, 2024 - 07:51
Aug 9, 2024 - 12:29
 0
தமிழ்ப்புதல்வன் திட்டம்.. கோவையில் தொடக்கி வைத்த முதல்வர்..மாணவர்கள் ரூ.1000 பெற என்ன நிபந்தனை
MK Stalin Tamil Pudalvan Thittam

Tamil Pudhalvan Scheme 2024 : 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது."தமிழ்ப்புதல்வன்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் தொடக்கி வைத்தார். இன்று முதலே மாணவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கல்வியே உயர்ந்த செல்வம். இந்தக் கல்விச் செல்வத்தை ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரியில் 5.9.2022 அன்று தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர்.

அதே போல அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை(Tamil Pudhalvan Thittam) நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். மேலும் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரன்ஸ் ஹவுஸ் என்ற பணப்பட்டுவாடா முறையில் மாதந்தோறும் வங்கியில் செலுத்தப்படும் என்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை(Tamil Pudhalvan Scheme 2024) செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.401 கோடி செலவாகும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்(Aadhaar Mandatory) என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் தகுதியான மாணவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு தெரியும் வகையில், கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் சேர்ந்துள்ள 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ள நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை இன்றைய தினம் கோவை அரசு கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின், தொடங்கி வைத்தார்.


இத்திட்டத்திற்கு தகுதி பெறுவதற்கான விதிமுறைகள் பின்வருமாறு..


1. வருமான உச்ச வரம்பு. இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள். தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும். மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

2. அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

3. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம், 2021ல் குறிப்பிட்டுள்ளவாறு “அரசுப் பள்ளி” என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள். நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகள். கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள். வனத் துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள் / அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.

4. உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள். இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.

5. தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.

6. வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.

7. மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர்.

8. ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.

9. பள்ளிப் படிப்பிற்கு பின்னர். உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையினை பெற இயலும்.

10. பருவத் தேர்வு / வருடத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

11. பிற மாநிலங்களில் மத்திய அரசின் கீழ் செயல்படும் IIT. NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.

இதனிடையே கோவையில் இன்றைய தினம் நடைபெறும் விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow