"கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலின் ஜுஜூபி” - செல்லூர் ராஜு தாக்கு

கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Aug 9, 2024 - 08:11
Aug 9, 2024 - 08:15
 0
"கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலின் ஜுஜூபி” - செல்லூர் ராஜு தாக்கு
செல்லூர் ராஜு

மதுரை மாவட்டத்தில் அதிமுக கழகம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஜெய்ஹிந்த்புரம், மெயின் ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை அவர் வழங்கினார். 

இதையடுத்து மேடையில் பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி இன்றைக்கு நடக்கிறது. திமுக ஒருமுறை ஆட்சி செய்தால் மற்றொரு முறை ஆட்சிக்கு வரமாட்டார்கள். கருணாநிதியாலேயே தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாதபோது ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி. விலைவாசி ஏற்றம், போதை புழக்கம் அதிகரித்து உள்ளதை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக திமுக கட்சிக்காரர்களையே ஸ்டாலின் அடக்க முடியாமல் திணறுகிறார். மேலும் தான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறினார் என்ன ஆனது. தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதாக திமுக அரசு சொன்னாலும் சொந்த கட்சிக்காரர்களையே சமாளிக்க முடியாமல் சிகிச்சை பெறதான் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்” என கிண்டலாக பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், “வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தது குறித்து வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளாராகளா..? ரூ. 10 லட்சம் கோடி ஈர்த்துள்ளார்கள் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அதன் விவரங்கள் இதுவரை கொடுக்கவில்லை. அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி திணறுகின்றனர். எனவேதான் வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் மக்கள் திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பார்கள். ஏழை மக்களின் கற்பக விருட்சமாக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார். உரிமை சீட்டு வார்டு செயலாளர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை கொடுக்க வேண்டும், தவறினால் தண்டிக்கப் படுவார்கள்” என தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், “அதிமுக மட்டும்தான் ஜனநாயக இயக்கம். தொண்டர்களும் தலைவர்களாகலாம், பொதுச் செயளாளராகலாம், முதலமைச்சராகலாம். திமுகவில் வாரிசுகள் மட்டும்தான் அரசியலுக்கு வர முடியும். பொதுவாக திமுக கட்சியில்லை அது ஒரு கம்பெனி. திமுக என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி” என திமுக அரசை தாக்கிப் பேசினார். 

இப்படி இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மழை பெய்யத் தொடங்கியதால், அதிமுக உறுப்பினர் அட்டை வாங்க வந்தவர்கள் அடையாள அட்டையை பெற்று கொண்ட பிறகு கலைந்து சென்றனர். ஆனாலும் பேச்சை நிறுத்தாத செல்லூர் ராஜு காலி நாற்காலிகளுக்கு மத்தியிலும் திமுக அரசை வசை பாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow