இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

Aug 9, 2024 - 12:42
Aug 9, 2024 - 13:44
 0
இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்
இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்

எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தற்போது தொடர்கதையாகிவிட்டது. அண்மையில் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இப்படியான சூழலில் கடந்த மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் தூத்துக்குடியில் உள்ள தருவைகுளம் மீனவ கிராமம், வேம்பார், வைப்பார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகில் ஏறி விசாரணை நடத்தினர். பின்னர் இரண்டு விசைப்படகுகளும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை சிறை பிடித்து பின்பு இலங்கை துறைமுகத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர். 

இதைத்தொடர்ந்து  சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களை இலங்கை கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி வரை 22 மீனவர்களையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 22 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படைகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கனவே கடந்த 6ம் தேதி தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து மனு அளித்தனர். பின்பு இது தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் அளித்தனர். 

மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அதிரடி... மேலும் 32 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

ஆனால் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 22 மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு  மீனவர்களையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்து அனுப்பி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow