சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மேலபட்டமங்களம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய பெரிய கருப்பன், “இன்றைக்கு கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிரம்பி இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். ஒரு ஊராட்சியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மட்டும்தான் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்துகிறோம். ஆனால் அரசாங்கத்தின் சார்பாக ஒரு ஊராட்சிக்கு 4 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதிகள் திட்டங்களாக வந்துள்ளது.
நம்முடைய பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி, இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை. மிஞ்சிப் போனால் நூறு நாள் வேலைக்கு போவதற்கு தயாராக இருக்கிறோம். பெண்களை பொறுத்த வரை, ஒரு வழியில் தடை இல்லாமல் வந்துகொண்டு இருக்கிறது.
எனது ஊர் அரளிக்கோட்டை இரண்டு போகம் விளையக்கூடியது. ஆனால் இன்று ஏதோ அத்தி பூத்தார் போல் ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயம் செய்கிறார்கள், மற்ற இடங்கள் எல்லாம் கருவேல மரங்கள் மண்டி கிடைக்கிறது. ஆக நம்மளை பொறுத்தவரை உழைப்பதற்கு யாரும் தயாராக இல்லை” என்றார்.
நிகழ்ச்சி முடிவில் பாலியல் தொந்தரவுக்கு எதிரான உறுதிமொழியை அமைச்சர் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் ஆகியோருடன் இணைந்து பொதுமக்களும் எடுத்துக்கொண்டனர்.