தமிழ்நாடு

பிகில் முதல் இஃப்தார் வரை: பட்டியல் போட்டு விஜயை தாக்கிய ப்ளூசட்டை மாறன்!

”நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தமிழக வெற்றிக் கழகம். ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்” என பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் ரணகளத்தை உண்டாக்கியுள்ளது.

பிகில் முதல் இஃப்தார் வரை: பட்டியல் போட்டு விஜயை தாக்கிய ப்ளூசட்டை மாறன்!
actor vijay-blue sattai maran

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொண்டார். மேலும், அங்கு இஸ்லாமியர்களுடன் இணைந்து சிறப்புத் தொழுகையில் பங்கேற்று நோன்புக் கஞ்சி குடித்தார். இந்த நிகழ்ச்சியில் 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த்,  ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சில கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விஜய் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் YMCA மைதானத்தில் குவிந்தனர். பவுன்சர்கள், காவல் துறையின் பாதுகாவலையும் மீறி விஜய் ரசிகர்கள் அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைந்தனர். இதனால் நிலைமை கட்டுப்பாடு மீறி சென்றது. நிகழ்வில் பங்கேற்க பாஸ் வழங்கப்பட்டிருந்தும் பலர் உள்ளே செல்ல முடியாமல் திணறினர்.

ப்ளூசட்டை மாறன் எழுப்பும் கேள்வி:

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் த.வெ.க-வின்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து பல்வேறு விவாதங்களை கிளப்பியது. பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூசட்டை மாறன் தன் பங்குக்கு விஜய் தொடர்பான நிகழ்வில் அவரது ரசிகர்களின் வரம்பு மீறிய செயல்களை பட்டியலிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். பதிவின் கமெண்ட் பகுதியிலும் விஜய் ரசிகர்கள் ப்ளூசட்டை மாறனை கடுமையாக தாக்கி பேச அந்த பதிவு வைரலானது. 

ப்ளூசட்டை மாறன் வெளியிட்ட பதிவின் விவரம் பின்வருமாறு-

“பிகில் இசை வெளியீட்டில் கலர் ஜெராக்ஸ் அனுமதிச் சீட்டு சர்ச்சை. வாரிசு இசை வெளியீடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தபோது, பல ரசிகர்கள் சுவரேறி உள்ளே குதித்தனர். மெயின் கேட் வழியே போலீஸை தள்ளிவிட்டு உள்ளே ஓடினர்.

லியோ ட்ரைலர் பார்த்த இவரது ரசிகர்கள் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் சீட்களை துவம்சம் செய்தனர். தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் அனுமதிக்கப்பட்டவர்களை விட அதிகம் பேர் உள்ளே கூடினர். காரணம்: கலர் ஜெராக்ஸ். பவுன்சர்களால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்.

இஃப்தார் நிகழ்வில் அழைப்பிதழ் இருந்தும் உள்ளே செல்ல இயலாதவர்கள் இருந்தனர். காரணம்: தடுப்புகளை தாண்டி பலர் உள்ளே ஓடியது. தயவு செய்து செருப்பை வெளியே கழற்றிவிட்டு வாருங்கள் என புஸ்ஸி ஆனந்த் கெஞ்சினார். இப்படியான புனித நிகழ்வு நடக்கும் அரங்கின் உள்ளே கூட.. விஜய்யை பார்த்து தளபதி தளபதி என கத்துகிறார்கள். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்விலும் சொதப்பல்கள். பொதுவெளியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் உள்ளரங்கில் முறையாக திட்டமிட்டு, உரிய பாதுகாப்புடன்  நடத்தும் நிகழ்வுகள் இவை. அதிகபட்சம் 3,000 பேர் மட்டும் பங்கேற்பது. இதையே இப்படி சொதப்பினால்.. இதைவிட பெருங்கூட்ட நிகழ்வை எப்படி நடத்துவார்கள்?

Read more: விஜய் கலந்து கொண்ட நோன்பு நிகழ்ச்சி.. லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த நிர்வாகிகள்

இதையெல்லாம் இனியாவது விஜய் சரி செய்வாரா அல்லது தொடர் கதை தானா? தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை கட்டுப்பாட்டுடன் நடக்க சொல்லி..‌பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க.‌. அறிவுறுத்த மாட்டாரா? நாளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இப்படி அமைதி, ஒழுங்கின்றி நெரிசலை ஏற்படுத்தும் ரசிகர்களும், அவர்களை கட்டுப்படுத்த தெரியாமல் நிகழ்ச்சிகளை நடத்தும் விஜயுமே பொறுப்பு.

உங்களை காண எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்பதை விட அதை ஒழுங்காக எப்படி கையாள்கிறீர்கள் என்பதே தலைமைப்பண்பு. அதையெல்லாம் காவல்துறை, பவுன்சர்கள், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் தொண்டர்கள் பார்த்து கொள்வார்கள். நாம் தூசி படாமல் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றால் போதுமென இனியும் நினைத்தால், அதற்கான பலனையும் நீங்களே அனுபவிக்கக்கூடும். இனியேனும் சுதாரித்து கொள்க.” என பதிவிட்டுள்ளார்.