சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். மேலும், அங்கு இஸ்லாமியர்களுடன் இணைந்து சிறப்புத் தொழுகையில் பங்கேற்று நோன்புக் கஞ்சி குடித்தார். இந்த நிகழ்ச்சியில் 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கட்சி சார்பில் யாரும் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல், தவெக கட்சி கொடிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சில கட்சி தலைவர்களே கலந்து கொண்டனர். தவெக தலைவர் விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் பலரும் ஒய்எம்சிஏ மைதானத்தில் குவிந்தனர்.
அப்போது, ரசிகர்கள் அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்களை பவுன்சர்கள் தடுக்க முயன்றபோது, ரசிகர்களுக்கும், பவுன்சர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சிறிது நேரத்திலேயே அவர்களை பவுன்சர்கள் கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உட்பட மூன்று பேரிடம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதாவது, வியாசர்பாடி எருகஞ்சேரி எஸ்.ஏ நகரைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில் என்பவரிடம் இருந்து 42 ஆயிரம் ரூபாயும், மண்ணடியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி துறைமுகம் பகுதி கிளை செயலாளர் அப்துல் அபுதாகீர் என்பவரிடம் இருந்து 63 ஆயிரம் மற்றும் மற்றொரு நபரிடமிருந்து 20 ஆயிரம் என மூன்று பேரிடம் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
மூவரும் நிகழ்ச்சி முடிந்து பார்த்தபோது பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் இருவரும் இது குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.