குற்றப்பட்டியலில் 261 பாஜக தலைவர்கள்; 1977 வழக்குகள் - பட்டியல் போட்ட செல்வபெருந்தகை

செல்வபெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

Jul 9, 2024 - 17:50
Jul 9, 2024 - 18:46
 0
குற்றப்பட்டியலில் 261 பாஜக தலைவர்கள்; 1977 வழக்குகள் - பட்டியல் போட்ட செல்வபெருந்தகை
செல்வபெருந்தகை மற்றும் அண்ணாமலை

பாஜக தலைவர்களில் 261 பேர் குற்றப்பட்டியலில் உள்ளதாகவும், அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரம் இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டி உள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “செல்வபெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எனக்கு அது குறித்து தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்களுக்கு பாஜகவில் இடம் இல்லை. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

ஆருத்ரா விவகாரத்திலும் அது தொடர்பாக ஆம்ஸ்டிராங் கொலை வழக்கிலும் பாஜகவினர் தொடர்பு உள்ளதாக எழும் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, “துக்க வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன் கோபத்துடன், என்னை ரெளடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கள் யாரையும் குற்றவாளிகள் என்று தெரிவிக்கவில்லை. ஆருத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேசி வருவதால், அதுகுறித்தும் விசாரிக்க கோரினோம். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை என்று ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற முன்னாள் முதல்வர்களே புகழ்ந்துள்ளனர்.

குற்றப்பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளேன். அண்ணாமலை எதற்காக தீடீரென ராஜினாமா செய்தார் என்பதை ஆராய வேண்டும்.

என்மீது அவதூறு பரப்பியதற்காக காவல்துறையில் புகார் கொடுக்கலாம். தமிழகத்தில் பட்டியலின ஆணையம் மிக வலிமையானதாக இருக்கிறது. அப்படி கொடுத்தால் அண்ணாமலையின் நிலைமை என்ன ஆகும்?

மகாத்மா காந்தியை சுட்டுக்கொல்லும் போது ராம், ராம் அவரை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். நாங்கள் அந்த வழியில் வந்தவர்கள். எனவே அண்ணாமலையை தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow