தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியாது.. பகீர் கிளப்பிய துரை வைகோ!

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்பி துரை வைகோ, நேரில் உங்களை சந்திக்க முடியாது, கோரிக்கைகளை மனுவாக அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என பேசிய கருத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 20, 2024 - 18:58
 0
தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியாது.. பகீர் கிளப்பிய துரை வைகோ!
தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியாது.. பகீர் கிளப்பிய துரை வைகோ!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துரை வைகோ 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையா 2,29,119 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மூன்றாவது முறையாக பெருங்கொண்டான் விடுதி, பெருங்களூர், மங்களத்துப்பட்டி, கருக்குடையான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி துரை வைகோ, சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “சட்டசபை உறுப்பினருக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஒரு எம்பிக்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 80 லட்சம் ரூபாய் மட்டுமே என்னால் நிதி ஒதுக்க முடியும், அதனால் எம்பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். இரண்டு மாதங்களாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, குறைகளையும் கேட்டு வருகிறேன். இதுதான் என் கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதனால் இனி வரும் காலங்களில் நேரில் வந்து மக்களை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. அதனால் எந்த கோரிக்கையாக இருந்தாலும் மனுவாக எம்பி அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அங்கிருந்து உங்கள் கோரிக்கை எனக்கு வந்துவிடும், முடிந்தவரை கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

இந்த கருத்து குறித்து வீடியோ வெளியிட்டுள்ள திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் கருப்பையா, “எதை நாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்டோமோ, அதையே இன்று திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த, மதிமுகவை சேர்ந்த வைகோ மகன் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசியிருக்கிறார். வாக்களித்த மக்கள் தன்னை வந்து சந்திக்குமாறு பேசியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. மக்களை ஏமாற்றும் செயலாக இது இருக்கின்றது. எது எப்படி இருந்தாலும், அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இம்மண்ணுக்கு சொந்தக்காரன் என்ற வகையில், நான் எப்போதும் நம் பகுதி மக்களுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கின்றேன். நம்முடைய அதிமுக இருக்கிறது. நாங்கள் எப்போதும் மக்களோடு மக்களாக, மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக இருப்போம் என்பதை தெரிவிக்கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow