சினிமா

Indian2: கடைசி நேரத்தில் இந்தியன் 2 ரிலீஸுக்கு சிக்கல்... கமல், ஷங்கரை விடாமல் துரத்தும் பஞ்சாயத்து

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Indian2: கடைசி நேரத்தில் இந்தியன் 2 ரிலீஸுக்கு சிக்கல்... கமல், ஷங்கரை விடாமல் துரத்தும் பஞ்சாயத்து
இந்தியன் 2 ரிலீஸுக்கு சிக்கல்

சென்னை: கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2, பல பஞ்சாயத்துகளை கடந்து இந்த வாரம் ரிலீஸாகவுள்ளது. கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை, கொரோனா லாக் டவுன் என அடுத்தடுத்து சிக்கல்களில் மாட்டிக்கொண்ட இந்தியன் 2, ட்ராப் ஆகிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமலின் விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால், மீண்டும் இந்தியன் 2-க்கு உயிர் கொடுத்து இப்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல இடங்களில் இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் ஓபனாகிவிட்டது.      

இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஜுலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை, ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தனது பெயரும் படத்தில் இடம்பெற்றது. 

ஆனால், இந்தியன் 2 திரைப்படத்தில் அதே வர்மகலை முத்திரையை தனது அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். ஆகவே இந்தியன் 2 படத்தை திரையரங்குகள், ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வமகேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், இயக்குநர் சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகினார். வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் 1993, 1994 ஆகிய ஆண்டுகளில் எழுதியுள்ள 2 புத்தகத்தில் வர்மக்கலை குறித்தும், முத்திரை குறித்தும் நுணுக்கமாக கூறப்பட்டு உள்ளது. புத்தக தகவல்களை மையமாக வைத்து ஆலோசனை செய்து தான் இந்தியன் முதல் பாகம் எடுக்கப்பட்டது. 

ஆனால், இந்தியன் 2-ல் எங்களை ஆலோசிக்காமல் வர்மகலை முத்திரைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன, புத்தகங்களை தழுவியே இந்தியன் படம் உருவாக்கப்பட்டது, இந்தியன் 2 பட டைட்டில் கார்டில் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கேட்கிறோம் என ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிமன்றத்தில் வாதாடினார். ஆகவே இது ஒரு தவறான வழக்கு, ஜுலை 11ம் தேதி இயக்குநர் சங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். வர்மகலை என்பது உலக அளவில் உள்ள ஒரு கலையாகும், அதனை கண்டுபிடித்தது அகஸ்தியர். இந்தியன் 2 படத்தில் வர்மகலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் படத்திற்கும் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என இயக்குனர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தில் வாதாடினார், 

இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வ மகேஸ்வரி, படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்துள்ளார். அதன்படி அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இந்தியன் 2ம் பாகம் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த விசாரணை 11ம் தேதி நடைபெறவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.