சவுக்கு சங்கருக்கு 4 நாள் போலீஸ் காவல் - பண மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மருந்து மாத்திரைகள் கூட தராமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

Jul 9, 2024 - 16:59
Jul 9, 2024 - 17:34
 0
சவுக்கு சங்கருக்கு 4 நாள் போலீஸ் காவல் - பண மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
Savukku Shankar Money Laundering Case

பண மோசடி வழக்கில் ஆஜரான சவுக்கு சங்கருக்கு 4 நாள் போலீஸ் காவல் கொடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெண் காவல் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை சில தினங்களுக்கு முன்பு போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் சவுக்கு சங்கர் மீது பண மோசடி வழக்கும் பாய்ந்தது.

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube இல் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசை வார்த்தை கூறியதால் கிருஷ்ணன் தன் மனைவியிடமிருந்து சுமார் ஏழு லட்சம் ரூபாய் பெற்று விக்னேஸ்வரனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேசை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டபொழுது பணம் தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் கொடுத்ததாக விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.

கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்டையில், விக்னேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை யூடியூபர் சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேற்று மாலை கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

பின்னர் இன்று காலை கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி எண் 1 பரத்குமார் முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர் படுத்தினர். நீதிபதியிடம் இந்த வழக்கு சம்பந்தமாக சவுக்கு சங்கரை விசாரிக்க ஏழு நாள் கஸ்டடியை கேட்டு கரூர் போலீசார் கோரிக்கை வைத்தனர். போலீஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாள் மட்டும் போலீஸ் காவல் கொடுத்து உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கரிகாலன், “புழல் சிறையில் சவுக்கு சங்கரை போலீசார் மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஒரு சாதாரண கைதிக்கு தர வேண்டிய அடிப்படை வசதிகள் கூட அவருக்கு அளிக்கப்படுவதில்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மருந்து மாத்திரைகள் கூட தராமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

படிப்பதற்கு புத்தகமோ செய்தித்தாள்களோ வழங்கப்படுவதில்லை. மாற்று உடைகள் கூட தர மறுக்கிறார்கள். சவுக்கு சங்கரை பார்க்க வழக்கறிஞர்கள் மனு போட்டு சென்றாலும் கூட அங்கு ஜெயிலரும் போலீசார் உடன் இருக்கின்றனர். ஏந்த விஷயமே பேச விடுவதில்லை. புழல் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு கூட அனுமதி அளிக்கப்படுவதில்லை.

செந்தில் பாலாஜி சிறை அறை மற்றும் மருத்துவமனையை தனது அலுவலகம் போல பயன்படுத்தி வருகிறார். இந்த வழக்கு கூட ஜோடிக்கப்பட்டதுதான். நாளை எங்கள் சார்பில் ஜாமீன் மனு போட உள்ளோம்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow