தமிழ்நாடு

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 “உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தை

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே கோமதி நகர் பகுதியில் வசித்து வரும் நபர் சென்னை கார்ப்பரேஷனில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் முதல் மனைவி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவர்களின் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி சென்னையில் அவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

வாய் பேச முடியாத மகள்

முதல் மனைவி இறந்த நிலையில் அந்த நபர் சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனது அக்கா மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு வாய் பேச முடியாத காது கேட்காத 27 வயது மகள் உள்ளார்.இவர் சிறு வயது முதலே தனது பாட்டி வீட்டிலேயே சென்னையில் வளர்ந்து வந்துள்ளார்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது பாட்டி உயிரிழந்த நிலையில் தனது மகளை இனி நாங்கள் பார்த்துக் கொள்வதாக கூறி தாயும், தந்தையும் அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் காது கேட்காத, வாய்பேச முடியாத பெண்ணிடம் இரவு நேரங்களில் பெற்ற தந்தையே உடலில் அந்தரங்க பகுதிகளில் கை வைப்பது, முத்தம் கொடுப்பது, குளிக்கும்போது முதுகு தேய்த்து விடச்சொல்வது உள்ளிட்ட தவறான செயல்களில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை

இதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் சென்னையில் உள்ள தனது உறவினர்களான சித்தி மற்றும் அத்தைக்கு தொலைபேசி மூலமாக வீடியோ கால் செய்து தான் இங்கு உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு வருவதாக சைகைகள் காட்டி தான் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்வேன் அல்லது எங்காவது சென்று விடுவேன் என அழுது புலம்பி உள்ளார்.


இதைப்பார்த்த அத்தைக்கு கோபம் வரவே உறவினர்களை ஒன்று திரட்டி கொண்டு கடம்பத்தூர் கோமதி நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்து அந்த கொடூர தந்தையிடம் இது சம்பந்தமாக கேட்டு பெண்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த நபர், தனது லுங்கியை தூக்கி காட்டி என்ன செய்ய முடியுமோ உங்களால் செய்து கொள்ளுங்கள் என காண்பித்தது உறவினர்களுடைய வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் அலட்சியம்

இதையடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து கடந்த 30ஆம் தேதி புகார் அளித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வாய் பேச முடியாத காது கேட்காத 27 வயது பெண்ணை அழைத்து விசாரணை செய்து அவரது உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்களை பார்த்து கோபமடைந்து சம்பந்தப்பட்ட தந்தையை அழைத்து வந்து காவல் நிலையத்தில் அமர வைத்து வறுத்தெடுத்த நிலையில், “தந்தை போல் நடந்து கொள்ள மாட்டாயா..?” “உனக்கு எங்கிருந்து இவ்வளவு திமிரு வரும்...” என ஏக வசனம் பேசியுள்ளார். ஆனால் கடந்த ஒரு வாரமாக புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தந்தையின் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் முதல் மனைவியின் மகன் உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு பஞ்சாயத்து பேசி அலைகழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவே செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கறிஞர்கள் வைத்து சமரசம் பேசிக் கொள்ளுங்கள் என கூறியதாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கண்கலங்க வைக்கும் வீடியோ

இதையடுத்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற நிலையில், உஷாரான ஆய்வாளர் இரவு நேரம் என்பதால் எஃப்ஐஆர் பதிவிட முடியாது நாளை காலை அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்கிறேன் என கூறி உறவினர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் புகார் அளித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் தழும்புகளை பார்த்து நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணே வாய் பேச முடியாமல் தனக்கு தந்தையால் நடந்த கொடுமைகளை சொல்லும் வீடியோ காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. வாய்பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.