தேனாறும், பாலாறும் ஓடும்னு சொன்னாங்க...ஆனால் எதையும் காணொம்... டிடிவி தினகரன் ஆவேசம்
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?
தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற அறிவுறுத்தியதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி தொடர்புடைய கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேனாறும், பாலாறும் ஓடும் என்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 24 மாதகால அகவிலைப்படியில் தொடங்கி ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் வரை அனைத்தையும் முடக்கிய திமுக அரசு, காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களைக் கூட நிரப்பாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவது அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசுவார் என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயாராக இருப்பதாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வெளிப்படையாகவே அறிவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், இனியும் மறுக்கும் பட்சத்தில் அதற்கான விளைவை அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ள நேரிடும் என திமுக அரசுக்கும், அதன் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?