Tamilisai Soundararajan : வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பால் கனகராஜிற்கு வாக்களித்தவர்களுக்கு தமிழிசை செளந்தர்ராஜன் நன்றி தெரிவித்தார். தாமரை சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், திருவெற்றியூர் காளிப்பட்டி பகுதியில் பாஜக சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தர்ராஜன், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைவருக்குமானது. இது இளைஞர்களுக்கான, பெண்களுக்கான, விவசாயிகளுக்கான, தொழில் முனைவோருக்கான பட்ஜெட். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக 9 அம்ச திட்டத்தோடு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.”
“பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயர் இல்லை; அதனால், நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்வதை நான் மறுக்கிறேன். இன்றைக்கு செங்கோல், பாராளுமன்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாட்சியாகத்தான் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்தின் குறியீடும் அங்கு இல்லை. ஆனால், நீங்கள் செங்கோலை எடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆக, நீங்கள் தமிழ் ஆர்வலர்களா? அல்லது நாங்கள் தமிழ் ஆர்வலர்களா?”
“துணை முதலமைச்சர் பதவியை பட்டியல் இனம் சேர்ந்த சகோதரருக்கு தர திமுக தயாரா? இன்று சமூக நீதியை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் முதலமைச்சர் பதவியை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அடிமையாக இருக்கக்கூடிய திமுகவிடம், திருமாவளவன் (Thirumavalavan) முதலமைச்சர் பதவியை கேட்கக்கூடாதா? துணை முதலமைச்சர் பதவியை கேட்கக் கூடாதா?”
“துணை முதலமைச்சர் என்றால் ஒரு குடும்பத்தை மட்டும் சார்ந்து தான் இருக்க வேண்டுமா என்ன? நான் தொண்டர்களையே கேட்கிறேன். ஒரு தொண்டர்களுக்கு இருக்கக் கூடாதா?. ஒரு கிரீடத்தை வைப்பதற்கு, சிம்மாசனம் வைப்பதற்கான ஏற்பாடுகள்தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது இதை தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.”
“அனைத்துக் கட்சியையும் சேர்த்து தான், அனைத்து மக்களையும் சேர்த்து தான் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். ஏற்கனவே, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக இருந்துவிட்டார். துணை முதலமைச்சராகவும் அவர்கள் குடும்பத்தில் இருந்து தான் வர வேண்டுமா? துணை முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தை சேர்ந்த சகோதரருக்கோ, சகோதரிக்கோ கொடுங்கள். அப்பொழுது நீங்கள் சமூக நீதியை காப்பவர்கள் என்று பாராட்ட முடியும்.”
“2026 தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். மின் கட்டணத்தை ஏற்றிவிட்டு, பால் விலையை ஏற்றிவிட்டு, சரக்கு விலையை ஏற்றிவிட்டு, பத்திரப்பதிவு கட்டணத்தை ஏற்றிவிட்டு, நீங்கள் 2026இல் ஆட்சிக்கு வர முடியாது. எல்லாவற்றையும் ஏற்றுங்கள். மக்கள் நிச்சயம் உங்களை ஆட்சியில் ஏற்றமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
கடந்த சில காலமாகவே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. அதற்கு பதிலளித்த உதயநிதி, வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொன்ன கையோடு, எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமானது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான் என்று சூசகமாக பதில் அளித்து இருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. அப்போது பதில் சொன்ன ஸ்டாலின் என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் எனக் கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே உதயநிதிக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
உதயநிதி எம்எல்ஏவாக வெற்றிப் பெற்ற உடன் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. பல அமைச்சர்களும் உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அடுத்த சில மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.