அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்... சூழ்நிலையை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்... உதயநிதி கோரிக்கை!
சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையை அகலப்படுத்துதல், தூர்வாருதல் மற்றும் கரையை வலுப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழை பெய்து வரக்கூடிய நிலையில் முதலமைச்சரின் அறிவுரைப்படி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரக்கூடிய அவசர கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தோம். நேற்று இரவு முதலே மழை பெய்து வரக் கூடிய சூழ்நிலையிலும் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. தற்போது ஒக்கியம் மடு பகுதியில் நேரில் ஆய்வு செய்துள்ளோம். ஏற்கனவே கடந்த மாதம் 13ம் தேதி இங்கு ஆய்வு செய்தோம். ஆகாயத்தாமரைகளை அகற்றியதால் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெள்ளநீர் வெளியேறி ஒக்கியம் மடு வழியாக பக்கிங்காம் கால்வாய் சென்று, பின்னர் அங்கிருந்து கடலில் கலக்கிறது.
ஒக்கியமடுவு நீர் வழித்தடம் ஒரே அளவில் இல்லாமல் மாறுபட்ட அளவில் உள்ளது. தண்ணீர் வெளியேறும் பாதை குறுகலாக இருந்ததால் வெள்ள நீர் தடையின்றி வெளியேற முடியாத சூழல் இருந்தது. அப்படி வெளியேற முடியாத வெள்ள நீர் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து கொள்ளும் ஆபத்தும் இருந்தது. எனவே இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தினார். அதன்படி நீர்வளத்துறை ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து ஒக்கியம் கால்வாய்க்கு இடைப்பட்ட பகுதியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடம் உள்ளது. வெள்ளநீர் வெளியேறுவதற்கு தடங்கலாக இருந்தது கண்டறியப்பட்டது. சட்ட வழிகளை பின்பற்றி தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தி, தற்பொழுது நீர் வழித்தடம் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 மீட்டர் அகலம் இருந்த இந்த நீர் வழித்தடம் தற்பொழுது 130 மீட்டராக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடைய உள்ளது.
இதன் மூலம் 7000 கன அடி நீர் மட்டுமே முன்பு சென்றிருந்தது. இப்பொழுது மணிக்கு 12000 கன அடி நீர் வெளியேற வாய்ப்புள்ளது. மேலும் மற்றொரு தனியார் கல்லூரியில் உள்ள மணல் திட்டுக்களை 30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மாநகராட்சி நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு பணிகளையும் விரைவாக முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். மூன்று அல்லது நான்கு நாட்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். திராவிட மாடல் அரசை பொருத்தவரை சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். சென்ற வருடம் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதனால்தான் 15 நாட்களுக்கு முன்பே பெரிய மழை வரும் என்று சொன்னார்கள். அப்போதே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டோம். இப்போதும் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?