Olympics: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி... இந்திய அணிக்கு வெண்கலம்... ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபாரம்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Aug 9, 2024 - 01:24
 0
Olympics: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி... இந்திய அணிக்கு வெண்கலம்... ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபாரம்!
இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. வெண்கல பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த ஒலிம்பிக் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி, தங்க பதக்கம் வெல்லும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் போராடி தோற்றது இந்திய அணி. இதனையடுத்து இன்று ஸ்பெயின் அணியுடன் மோதியது இந்திய ஹாக்கி டீம்.

இப்போட்டியுடன் இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் ஹாக்கியில் இருந்து ஓய்வுப் பெறுகிறார். அதனால் அவரை பதக்கத்துடன் வழியனுப்புவோம் என இந்திய அணி வீரர்கள் கூறியிருந்தனர். அதன்படி தற்போது ஸ்ரீஜேஸ் வெண்கல பதக்கத்துடன் ஹாக்கியில் இருந்து ஓய்வுப் பெறுகிறார். முன்னதாக ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினர். முதல் குவார்ட்டரில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

ஆனால், இரண்டாவது கால் பாதியில் இந்திய அணி செய்த தவறு காரணமாக, ஸ்பெயின் அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரால்ஸ் கோல் அடித்து, தனது அணிக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், இரண்டாவது குவாட்டரின் இறுதிநேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் முதல் கோல் அடித்து, ஆட்டத்தை 1-1 என சமன் நிலைக்கு கொண்டு வந்தார். அதேபோல், மூன்றாவது குவார்ட்டர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார் ஹர்மன் ப்ரீத்.

மேலும் படிக்க - மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு

பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்த கோலை அடித்து அசத்தினார் ஹர்மன் ப்ரீத். இதற்கு பதிலடி கொடுக்க ஸ்பெயின் அணி வீரர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை இந்திய வீரர்கள் அருமையாக தடுத்தனர். முக்கியமாக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருந்த போது, ஸ்பெயின் அணி கோல் கீப்பருக்கு பதிலாக கூடுதலாக ஒரு வீரரை களமிறக்கி கோல் அடிக்க முயன்றது. அதற்கு பலனாக ஸ்பெயின் அணிக்கு கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனையும் அட்டகாசமாக தடுத்தார் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ். 

இதனையடுத்து ஆட்டம் முடிவுக்கு வர, இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றிப் பெற்றது. இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. 2020 ஒலிம்பிக் தொடரிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஹாக்கிப் போட்டியில் இருந்து ஓய்வுப்பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow